மத்திய கிழக்கு வரலாற்றிலேயே சக்திவாய்ந்த தாக்குதல்: ஈரானின் பொருளாதார மையமான கார்க் தீவை சிதைத்த அமெரிக்கா; அடுத்தது என்ன?
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது அமெரிக்கப் படைகள் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. இது மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த ராணுவ நடவடிக்கை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்கள் இங்கே:-
எச்சரிக்கை
ராணுவ இலக்குகள் நிர்மூலம் - டிரம்ப் எச்சரிக்கை
தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள டிரம்ப், "எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கமாண்ட் ஈரானின் மணிமகுடமான கார்க் தீவில் உள்ள ஒவ்வொரு ராணுவ இலக்கையும் முழுமையாக அழித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் அங்குள்ள எண்ணெய் உட்கட்டமைப்புகளைத் தாக்க வேண்டாம் என நான் முடிவு செய்துள்ளேன். ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் இடைஞ்சல் விளைவித்தால், அந்த முடிவை நான் உடனடியாக மறுபரிசீலனை செய்வேன்." என்று எச்சரித்துள்ளார்.
முக்கியத்துவம்
கார்க் தீவு ஈரானுக்கு ஏன் முக்கியம்?
ஈரான் கடற்கரையிலிருந்து சுமார் 33 கிமீ தொலைவில் அமைந்துள்ள கார்க் தீவு, அந்நாட்டின் பொருளாதார உயிர்நாடியாகும். ஈரானின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் மேலானது இந்தத் தீவு வழியாகவே நடைபெறுகிறது. இந்தத் தீவின் மீதான தாக்குதல் ஈரானின் நிதி ஆதாரத்தை முற்றிலுமாக முடக்கும் வல்லமை கொண்டது. சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் எண்ணெய் விநியோகம் இங்கிருந்துதான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதம்
ஈரானிடம் அணு ஆயுதம் இருக்காது - அமெரிக்கா உறுதி
இந்தத் தாக்குதலின் மூலம் ஈரானின் ராணுவத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள டிரம்ப், "ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறாது. அமெரிக்காவையோ அல்லது உலக நாடுகளையோ அச்சுறுத்தும் நிலையில் ஈரான் இருக்காது. ஈரானிய ராணுவம் தனது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, எஞ்சியிருக்கும் நாட்டைக் காப்பாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம்" என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கத் தற்காப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்செத் இன்று மிகவும் தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.