ராணுவ முகாம்களில் மினி அணு உலைகள் அமைக்கிறது அமெரிக்கா: $2.2 பில்லியன் திட்டம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
பொது மின்சார விநியோக அமைப்பை சார்ந்திருக்காமல் சொந்தமாக மின்சாரம் தயாரிக்கும் நோக்கில், அமெரிக்காவில் உள்ள 5 முக்கிய ராணுவ முகாம்களில் மைக்ரோ ரியாக்டர்கள் எனப்படும் சிறிய அணு உலைகளை அமைக்க அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. ஜானஸ் (Janus Programme) என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் அணு உலைகளை உருவாக்கி இயக்க 5 முன்னணி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செயல்திறன் இலக்குகளைப் பொறுத்து அடுத்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்திற்காக 2.2 பில்லியன் டாலர் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
பாதுகாப்பு
தடையற்ற மின்சார விநியோகம் மற்றும் அவசரகால பாதுகாப்பு
இந்தத் திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் 20க்கும் மேற்பட்ட சிறிய அணு உலைகள் நிறுவப்பட வாய்ப்புள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஃபார்ட் பிராக், ஃபார்ட் கேம்ப்பெல், ஃபார்ட் ஹூட், ஃபார்ட் பென்னிங் மற்றும் ஃபார்ட் டிரம் ஆகிய ராணுவ தளங்களில் இவை அமைக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு அணு உலையும் 1 மெகாவாட் முதல் 20 மெகாவாட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
போர் அல்லது அவசர காலங்களில் டீசல் ஜெனரேட்டர்களுக்குப் பதிலாக தடையில்லா மின்சாரத்தை வழங்க இந்த அணு உலைகள் பெரிதும் உதவும்.
டிரம்ப் நிர்வாகம்
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் புதிய உத்தரவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2025 மே மாதம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அணுசக்தி உற்பத்தியை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமான வணிக ரீதியிலான அணு உலைகளைப் போல் அல்லாமல், இவற்றுக்கு அமெரிக்க ராணுவமே நேரடியாக அனுமதி வழங்கும்.
செப்டம்பர் 30, 2028க்குள் குறைந்தது ஒரு சிறிய அணு உலையையாவது வெற்றிகரமாக இயக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான அணு உலைகளை விட இவை பல ஆண்டுகள் தடையின்றி இயங்கும் திறன் கொண்டவை.
பாதுகாப்பு கவலைகள்
கழிவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள்
அணு உலைகளின் பாதுகாப்பு மற்றும் அணுக்கழிவுகள் குறித்து எழும் கவலைகளுக்குப் பதிலளித்த அதிகாரிகள், ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உடனடியாகத் தாமாகவே செயலிழக்கும் வகையில் இவை வடிவமைக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
மேலும், ஆபத்தான கதிர்வீச்சு கழிவுகள் ராணுவ முகாம்களுக்குள்ளேயே சேமிக்கப்பட மாட்டாது என்றும், ஆற்றல் அமைச்சகத்துடன் இணைந்து அவை பாதுகாப்பாக அகற்றப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.
இந்த திட்டம் அமெரிக்காவின் ராணுவத்திற்குத் தேவையான ஆற்றல் பாதுகாப்பில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.