பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க விமானப்படையின் உறுப்பினர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தீக்குளித்துக்கொண்டார்.
இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடர்பாக, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர் தீக்குளித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே தீயில் எரிந்த நபரை" காப்பாற்றுவதற்காக மீட்பு பணியாளர்கள் 1:00 மணி அளவில்(1800 GMT) சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த போது, இரகசிய சேவை நிறுவனத்தின் அதிகாரிகள், பற்றி எரிந்த தீயை ஏற்கனவே அணைத்திருந்தனர்.
அந்த நபர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல்
தீக்குளிப்பதற்கு முன் நேரலையில் பேசிய நபர்
மேலும், தீக்குளித்தவர் விமானப்படையின் உறுப்பினர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் கூடுதல் விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
இஸ்ரேலிய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், இந்த சம்பவத்தில் எந்த ஊழியர்களும் காயமடையவில்லை என்றும், தீக்குளித்த நபர் தங்களுக்கு தெரியாதவர் என்றும் கூறியுள்ளார்.
தீக்குளிக்கும் போது அந்த நபர் ட்விச்சில் நேரலையில் தன்னை தானே ஒளிபரப்பி கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பின்னர் அவர் "பாலஸ்தீனத்தை விடுவிக்கவும்!" என்று கூறிவிட்டு அவர் தீக்குளித்திருக்கிறார்.
காசாவின் மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த அதிர்ச்சிகரமான செயல் நடந்துள்ளது.