சீனாவுக்கு இந்தியா உள்ளிட்ட 40 நாடுகள் உதவுவதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா விதித்துள்ள அதிக அளவிலான வரிகளை தவிர்ப்பதற்காக, சீனா தனது ஏற்றுமதிப் பொருட்களை இந்தியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் வழியாக திசைதிருப்பி அமெரிக்காவிற்குள் அனுப்புவதாக அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்னணி வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ பரபரப்பு குற்றச்சாட்டைக் சுமத்தியுள்ளார். அமெரிக்க வர்த்தக மற்றும் உற்பத்தித் துறை வெளியிட்டுள்ள 'தி கிரேட் டிரான்ஸ்ஷிப்மென்ட் ஸ்கேம்' என்ற அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் உள்ள புனே-குஜராத்-சென்னை தொழில் மண்டலம், சீனாவிலிருந்து பம்புகள் மற்றும் கம்ப்ரஸர்களை இறக்குமதி செய்து, பின்னர் அவற்றை "இந்திய தயாரிப்பு" என்ற பெயரில் அமெரிக்காவிற்கு அனுப்புவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதனால் அமெரிக்காவில் உள்ள நகரங்களில் இயங்கும் உள்ளூர் தொழில்துறை விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்படுவதாக பீட்டர் நவாரோ தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு
AI தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு: 'டிடெக்டிவ் பார்டர்'
சீனாவின் இந்த வரி ஏய்ப்பு நடவடிக்கைகளைக் கண்டறிய 'டிடெக்டிவ் பார்டர்' என்ற செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை அமெரிக்கா பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த AI தொழினுட்பமானது, கப்பல் போக்குவரத்து தரவுகள், வழித்தட வரலாறுகள். தயாரிப்பு வகைப்பாடுகள், நிறுவனங்களின் உரிமையாளர் விவரங்கள் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்து, உண்மையான நியாயமான வர்த்தகத்திற்கும், சீனாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் வரும் சட்டவிரோத பொருட்களுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கண்டறிந்து தண்டனை மற்றும் அபராத நடவடிக்கைகளை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.