இன்று இங்கிலாந்து பொது தேர்தல்: ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?
இங்கிலாந்து அரசியலை மறுவடிவமைக்கக்கூடிய முக்கிய பொதுத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் வாக்களிக்கவுள்ளனர். தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி மகத்தான வெற்றியைப் பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கடைசி நிமிட முறையீட்டில், பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமரான ரிஷி சுனக், லேபர் கட்சிக்கு பெரும்பான்மை அளிக்காமல் இருக்குமாறு வாக்காளர்களை வலியுறுத்தினார். அப்படி லேபர் கட்சி வெற்றி பெற்றால், அது அதிக வரிகளுக்கு வழிவகுக்கும் என்றும் ரிஷி சுனக் எச்சரித்தார். எனினும், லேபர் கட்சி வேட்பாளர் ஸ்டார்மர், இந்த எச்சரிக்கைகளை "வாக்காளர் அடக்குமுறை" என்று நிராகரித்தார்
2024 ஐக்கிய ராஜ்யத்தின் பொதுத் தேர்தல் பற்றி சில தகவல்கள்
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறும். வாக்குச் சாவடிகள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். இந்த தேர்தலுக்கு சுமார் 40,000 வாக்குப்பதிவு நிலையங்கள், 46 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தல் முதல் புதிய வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட முன்னதாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுத்த சுனக், சமீபத்திய வாரங்களில் தனது பிரச்சார உத்தியை மாற்றியுள்ளார். அவர் ஐந்தாவது தொடர்ச்சியான வெற்றியைத் தேடுவதைக் கைவிட்டு, லேபர் கட்சி பெரும்பான்மைக்கு எதிராக எச்சரிக்கை செய்வதில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.