இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளிலிருந்து அகதிகள் செல்ல பிரிட்டன் புதிய திட்டம்: 2027 முதல் அமல்
செய்தி முன்னோட்டம்
ஆங்கிலக் கால்வாய் வழியாகச் சிறிய படகுகளில் ஆபத்தான முறையில் சட்டவிரோதமாகப் புலம்பெயர்வதைத் தடுக்கும் நோக்கில், இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் தங்கியுள்ள அகதிகளுக்காகப் புதிய கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சட்டப்பூர்வ மறுவாழ்வுத் திட்டத்தை பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தகுதியான அகதிகள் பிரிட்டனுக்குப் பாதுகாப்பாகச் சென்று புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான சட்டப்பூர்வ வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வழித்தடங்கள் வழியாக முதல் அகதிகள் குழு 2027 இலையுதிர்காலத்தில் பிரிட்டன் வரத் தொடங்குவார்கள் என்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
7 நாடுகள்
ஐநா பதிவு கட்டாயம்
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் புகலிடத்துறை அமைச்சர் அன்னா டர்லி, இத்திட்டம் முதற்கட்டமாக இந்தியா, வங்கதேசம், எகிப்து, கென்யா, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் உகாண்டா ஆகிய 7 நாடுகளில் இருந்து செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் அகதிகள் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறி, இந்த 7 நாடுகளில் ஒன்றில் அகதியாகத் தங்கியிருக்க வேண்டும்.
மேலும், இந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன்பாக சம்பந்தப்பட்ட நாட்டின் அதிகாரிகளிடமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர் ஆணையத்திடமோ தங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும்.
உண்மையான பாதுகாப்பு தேவைப்படும் அகதிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிசெய்ய, ஐநா ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகள் மூலமாகவே ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
சமூக ஆதரவு
வேலை மற்றும் கல்வி வழிகள்
இத்திட்டம் சமூக ஆதரவு, அகதிகள் பணி வாய்ப்பு மற்றும் அகதிகள் கல்வி ஆகிய மூன்று பிரதான வழிகளைக் கொண்டிருக்கும்.
இதன் மூலம் பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் அகதிகளுக்கு ஆதரவளிக்க முன்வரலாம். பிரிட்டனில் செயல்படும் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வ அமைப்புகள் இதற்கு முதன்மை ஸ்பான்சர்களாக செயல்பட விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடங்களின் மூலம் தொடக்கத்தில் சில நூறு அகதிகள் அனுமதிக்கப்பட்டு, சட்டவிரோதக் குடியேற்றம் குறையக் குறைய இந்த எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்த்தப்படும்.
பிரிட்டன் செல்லும் அனைத்து விண்ணப்பதாரர்களும் கடுமையான பயோமெட்ரிக் சோதனைகள், குற்றப் பின்னணி சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பிரிட்டனில் அகதிகள் அந்தஸ்துடன் குடியேற அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.