தாக்குதலில் இருந்து தப்பிக்கத் திட்டமா? ஈரானுக்கு பல பில்லியன் டாலர் நிதியையும் தங்கத்தையும் அள்ளிக் கொடுத்ததா அமீரகம்?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் $283 மில்லியன் மதிப்புள்ள 2 டன் தங்கத்தை ஈரானுக்குத் திரும்ப ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஈரானுக்கு எதிராக அமீரக நிலப்பரப்பில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதை தவிர்க்கவும், அமைதியை நிலைநாட்டவுமே அமீரகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஈரான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு விமானங்கள்
அபுதாபியில் இருந்து டெஹ்ரானுக்கு பறந்த விமானங்கள்
கடந்த ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், அபுதாபியிலிருந்து ஈரானின் டெஹ்ரான் மெஹ்ராபாத் விமான நிலையம் மற்றும் கரஜில் உள்ள பயாம் விமான நிலையத்திற்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
இந்த விமானங்கள் விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே நிறுத்தப்பட்டுப் பின்னர் மீண்டும் அபுதாபி திரும்பியதாக விமான கண்காணிப்புத் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னதாகக் கடந்த ஜூன் 8-ஆம் தேதியும் இதேபோன்று அபுதாபியிலிருந்து 3 பில்லியன் டாலர் நிதியை எடுத்துச் செல்ல விமானங்கள் இயக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
பயணிகள் விமானங்கள்
15 பயணிகள் விமானங்கள் விற்பனை
நிதி மற்றும் தங்கத்தைத் தவிர்த்து, அமீரகத்தை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் ஈரானிய விமான நிறுவனங்களுக்கு 15 பயன்படுத்தப்பட்ட பயணிகள் விமானங்களை விற்பனை செய்ய அமீரக அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.
சவுதியா நிறுவனத்திடம் இருந்த போயிங் 777-268ER விமானம் ECT ஏவியேஷன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
ஏரோவிஷன் FZ மற்றும் ஸ்கைசோர்ஸ் FZ ஆகிய நிறுவனங்கள் மூலம் 3 போயிங் 737 மற்றும் 2 ஏர்பஸ் A320-212 விமானங்கள் விற்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுப் போர் நடவடிக்கைகளின் போது ஈரானின் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானங்கள் அழிக்கப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக இந்த விமானங்கள் ஈரானுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ராஜதந்திர நடவடிக்கை
அமீரகத்தின் ராஜதந்திர நடவடிக்கை
அமீரகம் வெளியுறவுக் கொள்கையில் ஈரான் மீது கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக வெளி உலகுக்கு காட்டிக் கொண்டாலும், ஜூலை மாதம் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் வெடித்த மோதலில் தங்கள் நாடு பாதிக்கப்படக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது.
ஈரானை சமாதானப்படுத்தி, தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்காகவே இந்த நிதி, தங்கம் மற்றும் விமானப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.