பாகிஸ்தான் மற்றும் லெபனான் செல்கிறாரா டிரம்ப்? அமெரிக்கா-ஈரான் போர் ஒப்பந்தம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்
செய்தி முன்னோட்டம்
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டால், தான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். லாஸ் வேகாஸ் நகருக்கு புறப்படும் முன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ராஜதந்திர நகர்வு குறித்து பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைப்பதில் பாகிஸ்தான் மிக முக்கியமான பங்காற்றி வருகிறது. "இந்த அமைதி ஒப்பந்தம் இஸ்லாமாபாத்தில் கையெழுத்தாகும் பட்சத்தில், நான் நிச்சயம் பாகிஸ்தான் செல்வேன். அவர்கள் நான் அங்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள்," என்று டிரம்ப் கூறினார்.
பாராட்டு
பாகிஸ்தானுக்கு பாராட்டு தெரிவித்த டிரம்ப்
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் தலைமையிலான குழு தற்போது தெஹ்ரானில் முகாமிட்டுள்ள நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. பாகிஸ்தானின் அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்கள் இந்த விவகாரத்தில் "மிகச்சிறந்த" பங்களிப்பை அளிப்பதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஈரான்
ஈரானின் நிலைப்பாட்டில் மாற்றம்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட, தற்போது ஈரான் பேச்சுவார்த்தைக்கு அதிக நெகிழ்வுத்தன்மையைக் காட்டுவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இதற்கு ஈரான் தற்போது இணங்கி வருவதாகவும், தான் "அணுக்கரு தூசி" (Nuclear dust) எனக் குறிப்பிடும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க அவர்கள் முன்வந்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், போர் மீண்டும் தொடங்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தற்போதைய தற்காலிகப் போர்நிறுத்தம் வரும் ஏப்ரல் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது.
லெபனான்
லெபனான் பயணமும் 10 நாள் போர்நிறுத்தமும்
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்தத்தை டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, அமைதி முயற்சிகளை நேரில் பார்வையிடத் தான் லெபனான் செல்லக்கூடும் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார். துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழு ஏற்கனவே பாகிஸ்தானில் ஈரானிய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியுள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் ஒரு தெளிவான முடிவு எட்டப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.