48 மணிநேரம் கெடு! ஈரான் மின் உற்பத்தி நிலையங்களை அழித்து விடுவதாக டிரம்ப் மிரட்டல்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நாட்டிற்கு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை அடுத்த 48 மணிநேரத்திற்குள் எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் திறக்காவிட்டால், ஈரானின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை ஒட்டுமொத்தமாக அழிப்போம் என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கூடுதல் விவரங்கள் இங்கே:-
கெடு
டிரம்பின் 48 மணிநேர கெடு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், அமெரிக்காவிற்குள் டிரம்பிற்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதைச் சமாளிக்க அவர், ஈரானின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் முதல் சிறிய நிலையங்கள் வரை அனைத்தையும் அழிக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், எவ்வித மிரட்டலும் இன்றி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்துத் தடையின்றி நடைபெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
4000 கிமீ தூரம்
4,000 கிமீ தூரம் வரை பாயும் ஈரானிய ஏவுகணைகள்
இந்த எச்சரிக்கைக்கு முன்னதாக, ஈரான் முதல்முறையாகத் தனது நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க-பிரிட்டன் ராணுவத் தளம் மீது ஈரான் 4,000 கிமீ வரை பாயும் ஏவுகணைகளை ஏவித் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைகளின் எல்லைக்குள் பெர்லின், பாரிஸ் மற்றும் ரோம் போன்ற ஐரோப்பியத் தலைநகரங்கள் வருவதாக இஸ்ரேலிய ராணுவத் தளபதி ஐயல் ஜமீர் எச்சரித்துள்ளார். இதற்கிடையே, டிரம்பின் எச்சரிக்கைக்கு பதிலடியாக, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ஈரானும் மின் நிலையங்களை குறிவைத்து தாக்கும் என எச்சரித்துள்ளது.