ஈரான் போர் முடியப்போகிறது, ஆனால்...: டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போர் "விரைவில் முடிவுக்கு வரும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முழுமையாக முடக்கும் வரை ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் தொடரும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். Fox Business-ற்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறுகையில், "ஈரான் உடனான போர் முடிவுக்கு மிக அருகில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஆனால், இப்போதே நாங்கள் பின்வாங்கினால், அந்த நாடு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப 20 ஆண்டுகள் ஆகும். நாங்கள் இன்னும் எங்கள் பணிகளை முழுமையாக முடிக்கவில்லை," என்று கூறினார். ஈரானுடன் ஒரு பெரிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா விரும்புவதாகவும், ஈரான் அதற்கு இணங்கி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை மற்றும் ராணுவ நடவடிக்கை
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் மற்றும் பல போர்க்கப்பல்கள் ஈரான் துறைமுகங்களை நோக்கிய கப்பல் போக்குவரத்தைத் தடுத்து வருகின்றன. பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கப்பட்ட ராணுவத் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தகர்க்கவே இந்தத் நேரடித் தாக்குதல் நடத்தப்பட்டதாக டிரம்ப் நியாயப்படுத்தினார்.
பேச்சுவார்த்தை
'இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்குத் தயார்'
வரும் இரண்டு நாட்களில் ஈரானுடன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையும் இஸ்லாமாபாத்திலேயே நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. "நாங்கள் இப்போது பின்வாங்கினால், ஈரான் அணு ஆயுதம் ஏந்திய நாடாக மாறிவிடும். அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கைகள்," என்று டிரம்ப் விளக்கமளித்தார். தற்போது தற்காலிகப் போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், ஏப்ரல் 22-ம் தேதியுடன் அதன் காலக்கெடு முடிவடைகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து இரு நாடுகளும் இன்னும் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் கூறுகையில்,"இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆழமான அவநம்பிக்கையை ஒரே இரவில் தீர்த்துவிட முடியாது, அதற்கு ஒரு பெரிய ஒப்பந்தம் அவசியம்," என்று குறிப்பிட்டுள்ளார்.