நைஜீரியாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற தனது எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதில் வான்வழி அல்லது தரைவழித் தாக்குதல்கள் இருக்கலாம் என்றும் அவர் குறிப்ப்ட்டுள்ளார். "அவர்கள் கிறிஸ்தவர்களை மிக அதிக எண்ணிக்கையில் கொன்று குவிக்கிறார்கள். அதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை." என்று டிரம்ப் கூறியுள்ளார். இந்த கருத்து, நைஜீரியப் பிரஜைகள் கிறிஸ்தவ இனப்படுகொலைக்கு ஆளாவதாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வலதுசாரிகள் மத்தியில் இணையத்தில் பரவி வரும் கூற்றுகளுக்கு மத்தியில் வந்துள்ளது. எனினும், நைஜீரியாவின் பலவிதமான மோதல்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் எனப் பாகுபாடு இல்லாமல் இரு தரப்பினரையும் கொல்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நைஜீரிய அரசாங்கமும் கிறிஸ்தவர்கள் மட்டுமே குறிவைக்கப்படுவதை மறுத்துள்ளது.
பிராந்திய ஒருமைப்பாடு
பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்கும் வரையில் மட்டுமே நட்பு
முன்னதாக, டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், நைஜீரியா இந்தக் கொலைகளை நிறுத்தவில்லை என்றால், அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலளித்த நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபுவின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ப்வாலா, "பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவியப் போராட்டத்தில் நைஜீரியா அமெரிக்காவின் பங்காளியாகும். இந்த வேறுபாடுகள் இரு தலைவர்களும் சந்திக்கும் போது விவாதிக்கப்பட்டுத் தீர்க்கப்படும்." என்று கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவின் ஆதரவை நைஜீரியா வரவேற்பதாகவும், ஆனால் அது தங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பு அளிக்கும் வரையில் மட்டுமே என்றும் அவர் வலியுறுத்தினார்.