LOADING...
உலகையே அதிரவைத்த டிரம்ப்! 400 மில்லியன் பேரல் எண்ணெய் சந்தைக்கு வருகிறது; முழு விவரம்
அமெரிக்காவின் அவசரகால எண்ணெய் இருப்பு வெளிப்படுவதாக டிரம்ப் அறிவிப்பு

உலகையே அதிரவைத்த டிரம்ப்! 400 மில்லியன் பேரல் எண்ணெய் சந்தைக்கு வருகிறது; முழு விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 12, 2026
08:17 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், விண்ணைத் தொடும் எரிபொருள் விலையைக் குறைக்க அமெரிக்காவின் அவசரகால பெட்ரோலிய இருப்பிலிருந்து எண்ணெயை வெளியிட அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், தற்போது வெளியிடப்படும் எண்ணெய் இருப்பு பின்னர் மீண்டும் நிரப்பப்படும் என்று உறுதி அளித்தார். முன்பு இதே நடவடிக்கையை எடுத்த ஜோ பைடனைத் தான் விமர்சித்ததை நினைவுகூர்ந்த ட்ரம்ப், தற்போதைய சூழலில் இது அவசியமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

திட்டம்

400 மில்லியன் பேரல்: சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைந்த திட்டம்

சர்வதேச எரிசக்தி முகமையுடன் இணைந்து, உலக நாடுகள் அனைத்தும் தங்களின் தேசிய இருப்பிலிருந்து மொத்தம் 400 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை சந்தையில் வெளியிட ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். "இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை உலகளவில் எண்ணெய் விலையைக் கணிசமாகக் குறைக்கும். அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வரும் வரை, எரிசக்தி விநியோகம் தடையின்றி கிடைப்பதை எனது நிர்வாகம் உறுதி செய்யும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான்

ஈரானிய கடற்படை மீது கடும் தாக்குதல்: டிரம்ப் தகவல்

கடல்வழிப் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானிய கடற்படை மீது அமெரிக்கப் படைகள் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளதாக டிரம்ப் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார். ஈரானின் சுமார் 58 கடற்படைக் கப்பல்கள் அமெரிக்கத் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன. வணிகப் பாதைகளில் கண்ணிவெடிகளை விரித்த ஈரானின் 31 கப்பல்களையும் அமெரிக்கப் படைகள் நிர்மூலமாக்கியுள்ளன. இதனை ஆபரேஷன் எபிக் ஃபியூரி என்று குறிப்பிட்ட டிரம்ப், பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஒழிக்கும் வரை இந்தப் போர் நடவடிக்கை தொடரும் என்றும் கூறினார்.

Advertisement

ஆயுதங்கள்

நவீன ஆயுதங்களின் பயன்பாடு

கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கப் பயன்படுத்தப்பட்ட நவீன ஆயுத அமைப்புகளை, தற்போது ஈரானிய கப்பல்களுக்கு எதிராகப் பயன்படுத்தியதாக டிரம்ப் தெரிவித்தார். "இந்த நவீன ஆயுதங்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டன. எங்களின் இலக்குகளை எட்டும் வரை நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. தொடங்கிய வேலையைச் சிறப்பாக முடிப்போம்." என்று அவர் ஆவேசமாக உரையாற்றினார்.

Advertisement