காசாவை மீட்டெடுக்க டிரம்ப் அமைக்கும் "அமைதி வாரியம்"! பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட முக்கிய அழைப்பு
செய்தி முன்னோட்டம்
காசா பகுதியில் நிலவி வரும் போர் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு நீண்டகால நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 அம்சங்களை கொண்ட "விரிவான அமைதித் திட்டத்தை" (Comprehensive Plan) முன்வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக, போருக்குப் பிந்தைய காசாவின் நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைக் கண்காணிக்க "அமைதி வாரியம்" (Board of Peace) என்ற உயர்நிலை அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார். இந்தச் சர்வதேசக் குழுவில் இணையுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் டிரம்ப் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் தெரிவிக்கையில், "இந்த அமைதி வாரியத்தில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
கட்டமைப்பு
அமைதி வாரியத்தின் கட்டமைப்பு மற்றும் உறுப்பினர்கள்
அதிபர் டிரம்ப் தலைமையில் இயங்கவுள்ள இந்த வாரியத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மற்றும் அமெரிக்க கோடீஸ்வரர் மார்க் ரோவன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட உறுப்பினர்களாக உள்ளனர். இந்த வாரியமானது காசாவின் நிர்வாகத் திறனை மேம்படுத்துதல், பிராந்திய உறவுகளை வலுப்படுத்துதல், முதலீடுகளைத் திரட்டுதல் மற்றும் மிகப்பெரிய அளவிலான மறுசீரமைப்பு நிதியை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளில் கவனம் செலுத்தும். இதனுடன் இணைந்து காசாவின் பொதுச் சேவைகள் மற்றும் சிவில் அமைப்புகளை நிர்வகிக்க "தேசிய நிர்வாகக் குழு" (NCAG) மற்றும் "நிர்வாக வாரியம்" ஆகிய இரு துணை அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
அழைப்பு
சர்வதேச நாடுகளின் பங்களிப்பு
இந்த அமைதி வாரியத்தில் இந்தியா மட்டுமின்றி அர்ஜென்டினா, கனடா, எகிப்து, துருக்கி மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் இந்த அழைப்பு உறுதி செய்யப்பட்டு, அமைதியை நிலைநாட்டத் தங்களின் முழு ஆதரவை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி அதிபர் எர்டோகன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரேசில் அதிபர் லூலா டி சில்வா உள்ளிட்ட பல உலகத் தலைவர்களும் இந்த முயற்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கில் அமைதியை மீட்டெடுக்க அமெரிக்கா எடுத்துள்ள இந்த மிகப்பெரிய முன்னெடுப்பில், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.