அமெரிக்காவின் H-1B விசா குலுக்கல் முறை ரத்து: டிரம்ப் அரசு அதிரடி!
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் பணிபுரிய வழங்கப்படும் மிகவும் பிரபலமான H-1B விசா வழங்கும் முறையில் மிகப்பெரிய மாற்றத்தை அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த 'லாட்டரி' (குலுக்கல்) முறையை ரத்து செய்துவிட்டு, அதிக சம்பளம் மற்றும் அதிகத் திறன் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய விதியை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) கொண்டு வந்துள்ளது. இந்தப் புதிய விதி பிப்ரவரி 27, 2026 முதல் அமலுக்கு வரும் என்றும், 2027 நிதியாண்டு உச்சவரம்பு பதிவு பருவத்திற்கு இது பொருந்தும் என்றும், அந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கும் வேலைகளுக்கான பதிவுகள் மார்ச் 2026 இல் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றங்கள்
அறிவிக்கப்பட்ட முக்கிய மாற்றங்கள்
இதுவரை கணினி மூலம் அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. இனிமேல், விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும் சம்பளத்தின் அடிப்படையிலேயே விசா முன்னுரிமை வழங்கப்படும். அதிக ஊதியம் பெறும் மென்பொருள் பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இந்த முறை சாதகமாக அமையும். குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஐடி துறையில் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் விசா பெறுவது இனி கடினமாகும். குறிப்பிட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு விசாவுக்கும் கூடுதலாக $1,00,000 டாலர் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் முன்னர் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிப்பு
இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு?
ஒவ்வொரு ஆண்டும் H-1B விசா பெறுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்களாகவே உள்ளனர். இந்த மாற்றத்தால், இந்தியாவிலிருந்து செல்லும் உயர்திறன் கொண்ட நிபுணர்களுக்கு வாய்ப்பு உறுதி செய்யப்படும் அதே வேளையில், இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். "அமெரிக்கப் பணியாளர்களின் நலனைக் காக்கவும், திறமையானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) தெரிவித்துள்ளது.