
டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை தக்கவைக்க GENIUS சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து; பிரிக்ஸ் நாடுகளுக்கும் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் நிதி மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வலிமையான நடவடிக்கையாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) GENIUS சட்டத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம் அமெரிக்க டாலரை டிஜிட்டல் நிதியத்தில் முன்னணியில் நிலைநிறுத்துவதோடு, பிரிக்ஸ் கூட்டணிக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். வெள்ளை மாளிகையில் நடந்த கையெழுத்து விழாவின் போது, "பிரிக்ஸ் என்று ஒரு சிறிய குழு உள்ளது, அது வேகமாக மறைந்து வருகிறது" என்று டிரம்ப் பேசினார். அந்த குழு டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். அமெரிக்க Stablecoins சட்டம் (S.1582) என முறையாக அறியப்படும் GENIUS சட்டம், பணம் செலுத்தும் stablecoins-க்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை நிறுவுகிறது.
டாலர்
டிஜிட்டல் நிதி உலகில் டாலரை நிலைநிறுத்தும் முயற்சி
இந்த நடவடிக்கை அதிகரித்து வரும் பிளாக்செயின் சார்ந்த நிதி உலகில் டாலரின் பங்கை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பு நாணய அந்தஸ்தை இழப்பதன் விளைவுகளை டிரம்ப் வலியுறுத்தினார். அது உலகப் போரை இழப்பது போன்றது என்று கூறினார். கிரிப்டோகரன்சி சமூகத்தின் விடாமுயற்சி மற்றும் புதுமைக்காக டிரம்ப் பாராட்டினார். "இது உங்கள் கடின உழைப்பின் மிகப்பெரிய உறுதிப்படுத்தல்" என்று கூறினார். அமெரிக்க மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்திற்கு (CBDC) தனது எதிர்ப்பை அவர் மீண்டும் வலியுறுத்தி, அது நடக்காது என்று உறுதியளித்தார். அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்த சட்டத்தை பாராட்டினார். இது டாலரை பிளாக்செயினில் மாற்றுவதற்கான ஒரு தொலைநோக்குப் படி என்றார்.