LOADING...
இரண்டு வாரங்களில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க டிரம்ப் உறுதி: வர்த்தகப் பதற்றம் தணியுமா?
இரண்டு வாரங்களில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க டிரம்ப் உறுதி

இரண்டு வாரங்களில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க டிரம்ப் உறுதி: வர்த்தகப் பதற்றம் தணியுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 17, 2025
08:51 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்னும் இரண்டு வாரங்களில் சந்திப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார். இது அமெரிக்கா மற்றும் சீனா இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் பதட்டங்கள் தணிவதற்கான ஒரு சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது. கடந்த வாரம், அனைத்துச் சீன இறக்குமதிகள் மீதும் 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தியிருந்த நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபாக்ஸ் பிசினஸ் நெட்வொர்க்கிடம் பேசிய டிரம்ப், அத்தகைய கடுமையான வரி நடவடிக்கை நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்காது என்று ஒப்புக்கொண்டார். ஆனால், சீனா இந்த நடவடிக்கையை எடுக்கத் தன்னை கட்டாயப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். சமீபத்திய அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், சீனாவைப் பொறுத்தவரை விஷயங்கள் சரியாக இருக்கும் என்று நம்புவதாக அதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.

அரிய கனிமங்கள்

அரிய கனிமங்கள் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடு

இந்தச் சந்திப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது, சில நாட்களுக்கு முன் டொனால்ட் டிரம்ப் வைத்த கடுமையான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு வந்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு இன்றியமையாத அரிய கனிமங்கள் மீதான புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மூலம் உலக நாடுகளைச் சீனா கைதிகளாக வைக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, வரவிருக்கும் ஏபெக் உச்சிமாநாட்டில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க எந்தக் காரணமும் இல்லை என்றும் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். டிரம்பின் 100% வரி அச்சுறுத்தலுக்குச் சீனா உடனடியாகப் பதிலடி கொடுத்தது. அமெரிக்காவின் நடவடிக்கையை இரட்டை வேடத்தின் கிளாசிக் உதாரணம் என்று அழைத்ததுடன், இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கான சூழலைக் குலைப்பதாகவும் எச்சரித்தது.