மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக ஆயிரக்கணக்கான வீரர்களை குவிக்க டிரம்ப் அதிரடித் திட்டம்
செய்தி முன்னோட்டம்
ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான கூடுதல் அமெரிக்க வீரர்களை நிலைநிறுத்துவது குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தத் தகவல், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீதான போர் தற்போது மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், களத்தில் அமெரிக்காவிற்கு கூடுதல் ஆப்ஷன்களை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தற்போதைய சூழலைக் கையாள்வதற்கும், போரின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிப்பதற்கும் கூடுதல் படை பலம் அவசியம் என பென்டகன் அதிகாரிகள் கருதுகின்றனர்.
வியூகம்
அதிபர் டிரம்ப்பின் வியூகம்
அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, ஆயிரக்கணக்கான கூடுதல் வீரர்களை போர் முனைக்கு அனுப்புவதன் மூலம் ஈரானின் அச்சுறுத்தலை முழுமையாகக் கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் முயல்கிறது. தற்போதைய நிலையில் வான்வழித் தாக்குதல்கள் ஒருபுறம் நடந்தாலும், தரைவழிப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், முக்கிய எண்ணெய் வழித்தடங்களைக் கண்காணிக்கவும் கூடுதல் படைகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி ராணுவ விரிவாக்கத் திட்டம் போரின் போக்கை மேலும் தீவிரப்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.