
'இந்து விழுமியங்களால் உலகில் அமைதி ஏற்படும்': தாய்லாந்து பிரதமர்!
செய்தி முன்னோட்டம்
"பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி உலகமே கொந்தளிப்பாக இருக்கும் இந்த நேரத்தில் இந்து மதத்தின் அஹிம்சை, உண்மை, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் உலகில் அமைதியை நிலைநாட்ட முடியும்" என உலக இந்து மாநாட்டில் வாசிக்கப்பட்ட தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் உரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உலகளவில் இந்துக்களை முன்னோடியானவர்களாகவும், திறன் மிக்கவர்களாகவும் நிலைநாட்டும் பொருட்டு மூன்றாவது உலக இந்து மாநாடு தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது.
நேற்று தொடங்கி நாளை வரை நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வில் தாய்லாந்து பிரதமர் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவர் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படவே, அவருடைய உரை நிகழ்வில் வாசிக்கப்பட்டிருக்கிறது.
தாய்லாந்து
மூன்றாவது உலக இந்து மாநாடு:
முதலாவது அகில உலக இந்து மாநாடு இந்தியாவில் நடைபெற்ற நிலையில், மூன்றாவது உலக இந்து மாநாட்டை தாய்லாந்து நடத்துகிறது.
61 நாடுகளைச் சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், உலகளவில் கல்வி, பொருளதாரம், கல்வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஊடகம் மற்றும் அரசியல் ஆகியவற்றில் சாதனை படைத்த பல்வேறு முக்கிய நபர்களுக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இவர்களைத் தவிர, உலகளவில் 25 நாடுகளைச் சேர்ந்த எம்பிக்கள் மற்றும் மந்திரிகளுக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.