இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள்
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இன்று(மார் 14) தொடங்கும் "இந்தியா இம்மெர்ஸன்" ஆன்லைன் பாடத்திட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) என்ற வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (MEA) பிரிவால் இந்த கோர்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கோர்ஸில் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். மேலும், இது வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. இந்தியா இதுவரை தாலிபான் அரசாங்கத்தை ஒரு அரசாங்கமாக ஏற்றுக்கொள்ளவில்லை. தாலிபான் தீவிரவாதக் குழு காபூலைக் கைப்பற்றிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 2021இல் இந்தியத் தூதரகம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இது ஜூன் 2022 இல் மீண்டும் திறக்கப்பட்டது.
உலக நாடுகளை சேர்ந்த 30 பேர் பங்கேற்க உள்ளனர்
இன்று தொடங்கும் இந்த ஆன்லைன் பாடத்தில் பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் கூட்டாளிகளாக இருக்கும் அனைத்து நாடுகளும் இதற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கோர்ஸின் மூலம் இந்தியாவின் பொருளாதார சூழல், கலாச்சார பாரம்பரியம், சமூக பின்னணி மற்றும் பலவற்றை கற்றுக்கொள்ளலாம் என்று இந்த கோர்ஸின் அமைப்பாளர்கள் தெரிவித்தனர். ITEC இணையதளத்தில் உள்ள விவரங்களின்படி, அரசாங்க அதிகாரிகள், வணிகத் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்முனைவோர் போன்றவர்கள் 30 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.