பாகிஸ்தானில் மத ஊர்வலத்தில் குண்டுவெடிப்பு: 52 பலி, 130 க்கும் மேற்பட்டோர் காயம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதிக்கு அருகே மிலாடி நபி பேரணிக்கு மக்கள் கூடியிருந்தபோது, குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில், 52 -ற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், 130 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதீனா மசூதிக்கு அருகில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில், பேரணி பாதுகாப்பிற்காக பணியில் இருந்த மஸ்துங்கின் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) நவாஸ் காஷ்கோரியும் பலியானார். மஸ்துங் நகர ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) முகமது ஜாவேத் லெஹ்ரி, இந்த குண்டுவெடிப்பு ஒரு "தற்கொலை தாக்குதல்" என்றும், டிஎஸ்பியின் காருக்கு அருகில் தற்கொலை படையை சேர்ந்தவன், தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாகவும் கூறினார்.