அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு தீ வைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை(உள்ளூர் நேரம்) காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீவைக்கத்தனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள், சான் பிரான்சிஸ்கோ துணைத் தூதரகத்தின் மீது நடத்தும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இதற்கு முந்தைய தாக்குதல் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, சான்பிரான்சிஸ்கோ தீயணைப்புத் துறையினரால் தீ வேகமாக அணைக்கப்பட்டது. இதனால், பெரிய சேதங்களோ, உயிரிழப்புகளோ எதுவும் இல்லை. இது குறித்து உடனடியாக உள்ளூர், மாநில மற்றும் மத்திய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த வன்முறைச் செயலுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் தலைவர் ஹர்ஜித் சிங் நிஜ்ஜாருக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா?
"சனிக்கிழமை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் அதற்கு தீ வைக்க முயற்சித்ததை அமெரிக்கா கடுமையாக கண்டிக்கிறது. அமெரிக்காவில் உள்ள தூதரக கட்டிடங்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் ஆகியோருக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவது அல்லது வன்முறையை பிரயோகிப்பது ஒரு கிரிமினல் குற்றமாகும்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் ட்வீட் செய்துள்ளார். ஜூன் 18ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொலை செய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்ஜித் சிங் நிஜ்ஜாருக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை காலிஸ்தான் குழுக்கள் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. மேலும், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு தீ வைக்கப்படும் காட்சிகளையும் காலிஸ்தான் குழுக்கள் வெளியிட்டுள்ளன.