Loading...
ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் சேதம்; இந்திய மாலுமி பரிதாப பலி
ஏவுகணைத் தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் (File photo)

ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் சேதம்; இந்திய மாலுமி பரிதாப பலி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 14, 2026
06:39 am

செய்தி முன்னோட்டம்

ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொம்பாசா மற்றும் அல் பகியா ஆகிய இரண்டு அமீரக எண்ணெய் கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்குப் பகுதியில் ஓமன் நாட்டின் கடல் எல்லைக்குள் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 'மொம்பாசா' கப்பலில் பணியாற்றி வந்த இந்திய மாலுமி உயிரிழந்தார். காயம் அடைந்த 8 பேரில் 6 பேர் இந்தியர்கள், மற்ற இருவர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் நால்வருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

எச்சரிக்கை

UAE விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தாக்குதலின் காரணமாக இரண்டு கப்பல்களிலும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பலத்த சேதம் உண்டானது.

எனினும், கப்பல் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள அமீரக அரசு, "இது சர்வதேச சட்டங்களை மீறிய செயல். எங்களின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பேண உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்க எங்களுக்கு முழு உரிமை உண்டு" என்று எச்சரித்துள்ளது.

எண்ணெய் வர்த்தகம்

உலகளவில் முடங்கும் எண்ணெய் வர்த்தகம்?

இதற்கிடையே, ஓமனின் கல்ஹாத் பகுதிக்கு வடகிழக்கே 40 கடல் மைல் தொலைவில் சென்ற மற்றொரு கப்பல் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்கியதில் அதன் எஞ்சின் அறை சேதமடைந்ததாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக நிறுவனம் (UKMTO) தெரிவித்துள்ளது.

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான கடல்வழி முற்றுகையை மீண்டும் அமல்படுத்துவதாக அறிவித்து, மூன்றாவது நாளாக அமெரிக்கப் படைகள் ஈரானின் கடலோரக் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணைத் தளங்கள் மீது வான்வழித் தாக்குதலை நடத்திய சில மணி நேரங்களிலேயே ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.

இந்தத் தொடர் தாக்குதல்கள் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT