LOADING...
இலங்கையில் கடும் மழை வெள்ளத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்; பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு
இலங்கையில் கடும் மழை வெள்ளத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்

இலங்கையில் கடும் மழை வெள்ளத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்; பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 28, 2025
10:46 am

செய்தி முன்னோட்டம்

இலங்கையில் கடந்த வாரத்தில் தொடங்கிய கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவாக மாறியதையடுத்து, பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. நிலைமை மோசமடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை (நவம்ப 28) அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மத்திய மலைப்பகுதிகளில் அமைந்துள்ள பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளால் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின்படி, பதுளை மற்றும் நுவரெலியா பகுதிகளில் 21 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 14 பேர் காயமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

மீட்பு பணிகள்

போக்குவரத்து மற்றும் மீட்புப் பணிகள் பாதிப்பு

கடும் மழை காரணமாக பெரும்பாலான நீர்த்தேக்கங்களும், ஆறுகளும் நிரம்பி வழிவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாறைகள், மண் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால் பல பகுதிகளில் சாலைகள் மற்றும் ரயில் தடங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாகப் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே சிக்கித் தவித்த மக்களை மீட்க, விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் கடற்படையினர் படகுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அம்பாறை நகரத்திற்கு அருகே வெள்ள நீரில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் மூன்று பயணிகள் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement