சமூக ஊடகங்களால் தங்கள் சொந்த உடல் தோற்றத்தை வெறுக்கும் குழந்தைகள்: ஆய்வு
சமூக ஊடகங்களின் தாக்கத்தால் குழந்தைகள் தங்கள் உடலை, உடலின் அமைப்பை வெறுக்க தொடங்குகின்றனர் என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. இன்றைய இளம் தலைமுறையினரின் தற்போதைய மற்றும் எதிர்கால ஆரோக்கியத்திற்கு சமூக ஊடகங்கள் கணிசமான ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்று எச்சரிக்கிறது இந்த ஆய்வு. 12 முதல் 21 வயதுக்குட்பட்டவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 1,024 குழந்தைகள் இதில் கலந்து கொண்டனர். 'ஸ்டெம்4' என்னும் இளைஞர் மனநல தொண்டு நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. சமூக வலைத்தளங்களால் இளம் தலைமுறையினருக்கு ஏற்படும் பிரச்சனைகளை பல ஆய்வுகள் நமக்கு எடுத்துரைத்து இருக்கிறது. அந்த வரிசையில், சமூக ஊடகங்களின் தாக்கத்தால் குழந்தைகள் தங்கள் சொந்த உடலை வெறுக்க தொடங்குகின்றனர் எங்கிறது இந்த புதிய ஆய்வறிக்கை.
ஆய்வில் கிடைத்திருக்கும் தகவல்கள்:
12 வயதுக்குட்பட்ட 4 ல் 3 குழந்தைகள் தங்கள் உடலை வெறுக்கின்றனர். 10ல் 8 இளம் தலைமுறையினர்(18-21 வயது) தங்கள் தோற்றத்தை அசிங்கம் என்று நினைக்கிறார்கள். 10ல் 4 பேருக்கு சமூக வலைத்தளங்களால் மன நலன் குறைந்துள்ளது. 14 சதவீதம் பேர் தங்கள் உடலை அழகாக காட்ட வேண்டும் என்பதற்காக கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கின்றனர். உண்ட உணவை வாந்தி எடுத்து உடலை இளைக்க வைக்கும் ப்ளூமியா(Bulimia) என்ற மனநல உணவுக் கோளாறுகள் இவர்களுக்கு இருக்கிறது. கிட்டத்தட்ட 97% பேர் மொபைல் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் 70% பேர் சமூக வலைத்தளங்களால் தங்களுக்கு மன அழுத்தம், கவலை மற்றும் மனச்சோர்வு ஏற்படுவதாக பதிவு செய்திருக்கின்றனர்.