LOADING...
பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி
தம்பதியர் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள கோராயாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி

எழுதியவர் Sindhuja SM
Mar 28, 2023
05:05 pm

செய்தி முன்னோட்டம்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய தம்பதியர் சனிக்கிழமை அன்று(மார்-25) அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுக்விந்தர் சிங்(41) மற்றும் அவரது மனைவி கிரண்தீப் கவுர்(33) ஆகியோர் தங்கள் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இருவரும் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள கோராயாவை சேர்ந்தவர்கள் ஆவர். சனிக்கிழமை இரவு சுக்விந்தர் வேலை முடிந்து வீடு திரும்பியவுடன் தம்பதியினரின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்ததை சிசிடிவி காட்சிகள் காட்டுகிறது. முதலில் சுக்விந்தரை பலமுறை துப்பாக்கியால் சுட்ட அந்த மர்ம நபர், அதன் பின், கிரண்தீப் மீது இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார். இதனால், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மணிலா

இரத்த வெள்ளத்தில் கிடந்த தம்பதியர்

சுக்விந்தர் 19 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்ஸில் குடியேறி, நிதி தொடர்பான தொழில் நடத்தி வந்தார். அவர் கிரண்தீப்பை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் என்றும் ஐந்து மாதங்களுக்கு முன்பு கிரண்தீப் மணிலாவுக்குச் சென்றார் என்றும் கூறப்படுகிறது. சுக்விந்தரின் மூத்த சகோதரர் லக்வீர் சிங் செய்தியாளர்களிடம், "ஞாயிற்றுக்கிழமையில் இருந்து நாங்கள் அவனுக்கு பலமுறை தொடர்பு கொண்டோம், ஆனால் அவன் பதிலளிக்கவில்லை. அதனால், நான் என் மாமாவிடம் ஒருமுறை அவனை வீட்டில் சென்று பார்த்துவிட்டு வருமாறு கூறினேன். அங்கு என் சகோதரனும் அவனுடைய மனைவியும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை என் மாமா கண்டிருக்கிறார்." என்று கூறியுள்ளார்.