LOADING...
ஏவுகணைகளுக்கு நடுவே ஒரு நள்ளிரவுப் பயணம்: ஹார்முஸ் ஜலசந்தியைத் தாண்டி ஷென்லாங்' கப்பல் மும்பை வந்தடைந்தது எப்படி?
ஹார்முஸ் ஜலசந்தியைத் தாண்டி மும்பை வந்தடைந்தது 'ஷென்லாங்' கப்பல்

ஏவுகணைகளுக்கு நடுவே ஒரு நள்ளிரவுப் பயணம்: ஹார்முஸ் ஜலசந்தியைத் தாண்டி ஷென்லாங்' கப்பல் மும்பை வந்தடைந்தது எப்படி?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 12, 2026
05:54 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட ஷென்லாங் கப்பல், உயிருக்கு ஆபத்தான ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து பாதுகாப்பாக மும்பை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்தப் பாதையைக் கடந்து இந்தியா வந்து சேர்ந்துள்ள முதல் கப்பல் இதுவாகும்.

சிக்னல்

சிக்னலை அணைத்துவிட்டு ஒரு 'டார்க்' பயணம்

மார்ச் 1 ஆம் தேதி சவுதியின் 'ராஸ் தனுரா' முனையத்தில் இருந்து புறப்பட்ட இக்கப்பல், மார்ச் 8 ஆம் தேதி ஹார்முஸ் ஜலசந்தியின் மையப்பகுதிக்கு வந்தது. அந்த இடத்தில் திடீரென கப்பலின் இருப்பிடத்தைக் காட்டும் ஏஐஎஸ் மற்றும் டிரான்ஸ்பாண்டர் கருவிகள் அணைக்கப்பட்டன. எதிரி நாடுகளின் ஏவுகணைகள் அல்லது ட்ரோன்கள் தங்களைக் கண்காணிக்கக் கூடாது என்பதற்காக, கேப்டன் இந்த அதிரடி முடிவை எடுத்தார். இதனைச் சர்வதேசக் கடல்சார் மொழியில் "Going Dark" என்று அழைக்கிறார்கள். ஒரு நாள் முழுவதும் மாயமாக இருந்த கப்பல், ஆபத்தான பகுதியைக் கடந்த பின்னர் மீண்டும் மறுநாள் சிக்னலில் தென்பட்டது.

விவரங்கள்

ஷென்லாங் கப்பல் குறித்த விவரங்கள்

மும்பையின் ஜவஹர் தீவு முனையத்தில் (Jawahar Dweep Terminal) நங்கூரமிட்டுள்ள இந்தக் கப்பல் குறித்த சில முக்கியத் தகவல்கள்: சரக்கு: 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய். கேப்டன்: இந்தியரான சுக்ஷாந்த் சிங் சாந்து. ஊழியர்கள்: இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த 29 ஊழியர்கள். மேலாண்மை: கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த டைனாகோம் டேங்கர் மேனேஜ்மென்ட். இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியில் பாதியளவு இந்தச் சிறிய ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியுள்ள நிலையில், ஷென்லாங் கப்பலின் வருகை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

Advertisement