டிரம்பின் அதிரடி H-1B விசா கொள்கை: "அமெரிக்கர்களுக்குப் பயிற்சி கொடுத்துவிட்டு, தாய்நாடு திரும்ப வேண்டும்"
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் கருவூலத் துறைச் செயலாளராக பணியாற்றி வரும் ஸ்காட் பெஸ்ஸென்ட் டிரம்பின் புதிய H-1B விசா கொள்கையின் நோக்கத்தை விளக்கியுள்ளார். வெளிநாட்டு திறமைசாலிகள் அமெரிக்கத் தொழிலாளர்களை நிரந்தரமாக மாற்றுவதற்கு அல்ல, மாறாக பயிற்சி அளிப்பதற்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதிக்கப்படுவார்கள் என்பதே இந்தத் திட்டத்தின் மையக்கருத்து என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மையக் கூற்று
கொள்கையின் மையக் கூற்று என்ன?
H-1B விசா திட்டத்திற்கான நிர்வாகத்தின் பார்வையை பெஸ்ஸென்ட் ஒரு எளிய வாக்கியத்தில் சுருக்கினார்: "அமெரிக்கத் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளியுங்கள். பிறகு நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள். அதன்பின் அமெரிக்கத் தொழிலாளர்கள் முழுமையாகப் பொறுப்பேற்றுக்கொள்வார்கள்." என்றார். இது, அமெரிக்காவில் நிரந்தரமாக வேலை செய்வதற்கான ஒரு நுழைவாயிலாகப் பார்க்கப்பட்ட H-1B விசா திட்டத்தின் நீண்டகாலப் புரிதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
காரணம்
திட்டம் உருவானதற்கான காரணம் என்ன?
அறிவுப் பரிமாற்ற உத்தி: பல ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்டதனால், அமெரிக்கா இழந்துவிட்ட உற்பத்தித் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் என்று பெஸ்ஸென்ட் தெரிவித்தார். குறிப்பாக, கப்பல் கட்டுமானம் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி போன்ற துறைகளில் இழந்த தொழில்நுட்பத் திறன்களை அமெரிக்கத் தொழிலாளர்களுக்குப் பயிற்றுவிக்கவே தற்காலிகமாக வெளிநாட்டு நிபுணத்துவம் தேவைப்படுகிறது என்றார். வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்கர்களின் வேலைகளைப் பறித்துவிடுவார்கள் என்ற கவலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, பெஸ்ஸென்ட் அதனை உறுதியாக மறுத்தார். "பல ஆண்டுகளாக நாங்கள் இங்கே கப்பல்களையோ அல்லது செமிகண்டக்டர்களையோ தயாரிக்கவில்லை. எனவே, வெளிநாட்டுக் கூட்டாளர்கள் வந்து அமெரிக்கத் தொழிலாளர்களுக்குக் கற்பிப்பது எங்களுக்கு ஒரு வெற்றிகரமான நடவடிக்கை" என்றார்.
தாக்கம்
இந்தியர்களுக்கு என்ன தாக்கம்?
இந்த புதிய கொள்கை, தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT Sector) அதிக அளவில் H-1B விசாக்களைப் பயன்படுத்தித் தங்கள் ஊழியர்களை அமெரிக்காவுக்கு அனுப்பும் இந்திய நிறுவனங்களுக்கும், அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமையை (Green Card) எதிர்பார்த்திருக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசா மூலம் அமெரிக்காவில் தங்கியிருக்கும் கால வரம்பு இறுக்கப்படுவதுடன், திறன் மாற்றம் முடிந்தவுடன் அவர்கள் நாடு திரும்புவது கட்டாயமாக்கப்படலாம். மேலும், சமீபத்தில் ஊதியத்தின் அடிப்படையில் விசா விண்ணப்பங்களைப் பிரிப்பது, அதிக ஊதியம் பெறுபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற பிற H-1B விசா கட்டுப்பாடுகளும் இந்தத் திட்டத்துடன் சேர்ந்து இந்தியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.