நேபாளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை
நேபாளத்தில் நேற்று 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 153 பேர் உயிரிழந்திருந்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு 9,000 பேரை காவு வாங்கிய நிலநடுக்கத்திற்கு பின், அந்நாட்டை தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம், இப்பகுதியில் பூமிக்கு அடியில் உள்ள அழுத்தத்தை குறைக்கவில்லை எனவும், இப்பகுதியில் மேலும் பல நில நடுக்கங்கள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேபாளத்தின் மத்திய பெல்ட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்
நிலநடுக்கவியல் நிபுணரும், நேபாளின் தேசிய நிலநடுக்க தொழில்நுட்ப சங்கத்தின் (NSET) நிர்வாக இயக்குநருமான டாக்டர் அமோத் தீட்சித் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் நேபாளத்தின் மத்திய பெல்ட்டில் ஏற்பட்டது", "இது அதிகப்படியான ஆற்றல் வெளியிடும் பகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் வரலாற்றைக் கொண்டுள்ளது" என அவர் தெரிவித்தார். இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் மோதியதால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், அவை தொடர்ந்து ஒன்றையொன்று மோதி மேலோட்டத்தில் அழுத்தத்தை உருவாக்குகின்றன என அவர் கண்டறிந்துள்ளார். இந்த அழுத்தங்கள் காலப்போக்கில் குவிந்து, அவ்வப்போது பூகம்பங்கள் வடிவில் வெளிப்படுவதாகவும், ஆனால் குவிப்பு விகிதம் வெளியீட்டின் விகிதத்தை விட வேகமாக உள்ளதாக அவர் கூறினார்.
மக்களும் அதிகாரிகளும் விழிப்புடன் இருக்க விஞ்ஞானி வலியுறுத்தல்
நேபாளத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பெல்ட்களில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கங்கள், மத்திய பெல்ட்டைப் பாதிக்கவில்லை என்றும், ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் அப்பகுதியில் குவிந்துள்ள அழுத்தத்தில் ஒரு பகுதியை மட்டுமே வெளியிட்டது என்றும் அவர் கூறினார். ரிக்டர் அளவில் 8 அல்லது அதற்கும் அதிகமான நிலநடுக்கத்தை உருவாக்குவதற்குப் போதுமான அழுத்தம் இன்னும் இருப்பதாக அவர் மதிப்பிட்டுள்ளார். மேலும், அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் எனக் கூறிய டாக்டர் தீட்சித், மக்களும், அதிகாரிகளும் விழிப்புடன் இருக்கவும், அத்தகைய சூழ்நிலைக்குத் தயாராகவும் இருக்க வேண்டும் என்றும், சாத்தியமான மிகப்பெரிய நிலநடுக்கத்தின் அபாயத்தையும் தாக்கத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.