ஸ்வீடனில் ரஷ்ய தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்: வியன்னா ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி ரஷ்யா கடும் கண்டனம்
செய்தி முன்னோட்டம்
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ரஷ்ய தூதரக வளாகத்தைக் குறிவைத்து நள்ளிரவில் மர்ம ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது தூதரக அதிகாரிகளை அச்சுறுத்துவதற்காகவே இந்தத் திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
போலி வெடிகுண்டு வீச்சு
நள்ளிரவில் சிவப்பு பெயிண்ட் மற்றும் போலி வெடிகுண்டு வீச்சு
ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, நள்ளிரவு 2:00 மணி அளவில் தூதரக வளாகத்திற்குள் இரண்டு மர்ம ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. அதில் ஒரு குவாட்காப்டர் வகை ட்ரோன், தூதரகத்தின் உள்ளே சிவப்பு நிற பெயிண்ட்டைக் கொட்டியுள்ளது. மற்றொரு ட்ரோன், பார்ப்பதற்கு அசல் வெடிகுண்டு போலத் தோற்றமளிக்கும் ஒரு போலி வெடிபொருளை சுமந்தபடி வந்து தூதரகக் கட்டிடத்தின் மிக அருகே விழுந்து நொறுங்கியுள்ளது.
ஒப்பந்தத்தை மீறியதாக குற்றச்சாட்டு
வியன்னா ஒப்பந்தத்தை மீறியதாக ஸ்வீடன் மீது மாஸ்கோ புகார்
இந்த சம்பவம் வெறும் சாதாரணப் போராட்ட வடிவம் அல்ல என்றும், தங்களது ராஜதந்திர அதிகாரிகளை அச்சுறுத்துவதற்கான ஒரு நேரடி மிரட்டல் முயற்சி என்றும் ரஷ்யா சாடியுள்ளது. தூதரகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட நாடுகள் கடமைப்பட்டிருக்கின்றன என்ற 1961 வியன்னா ஒப்பந்தத்தின் விதிகளைப் பின்பற்ற ஸ்வீடன் அரசு தவறிவிட்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தங்களது தூதரகம் மீது டஜனுக்கும் அதிகமான இதுபோன்ற அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டும், ஸ்வீடன் போலிசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என மாஸ்கோ கோபமடைந்துள்ளது.
ஹைப்ரிட் போர்
கீர் ஸ்டார்மர் தீவைப்பு வழக்கின் பின்னணியும் ஹைப்ரிட் போரும்
இந்தத் தாக்குதல் சம்பவம், சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரின் சொத்துக்கள் மீது ரஷ்ய உளவுத்துறை தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்ட தீவைப்பு சம்பவங்களின் தீர்ப்பிற்குப் பிறகு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யா ட்ரோன் அச்சுறுத்தல்கள், இணையவழித் தாக்குதல்கள் மற்றும் தீவைப்பு போன்ற மறைமுக ஹைப்ரிட் உத்திகளைப் பயன்படுத்தி வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த தூதரகத் தாக்குதல் இருதரப்பு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.