ஈரானில் தரையிறங்கிய ரஷ்யாவின் 'Doomsday' சிறப்பு விமானம்; உலக நாடுகளை அதிரவைத்த மாஸ்கோவின் நகர்வு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் மிக முக்கிய மற்றும் பாதுகாக்கப்பட்ட போர் கட்டுப்பாட்டு விமானமான 'Tu-214PU' திடீரென ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் தரையிறங்கியுள்ளது. ரஷ்யா அல்லது ஈரான் ஆகிய இரு நாடுகளுமே இந்த விமானத்தின் வருகைக்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடாததால், இது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சிறப்பம்சம்
ரஷ்யாவின் 'Doomsday' விமானம் என்றால் என்ன?
Tu-214PU விமானம் என்பது ரஷ்யாவின் மிகவும் பாதுகாப்பான, அணுசக்தி அல்லது போர் போன்ற அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வான்வழி கட்டளை மையமாகும்.
தரைவழித் தகவல் தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்படும் மிக மோசமான போர் சூழலிலும், நாட்டின் மிக உயரிய ராணுவ மற்றும் அரசு செயல்பாடுகளை வான்வழியாக இருந்தபடியே ஒருங்கிணைக்கும் திறன் கொண்டது.
இந்த விமானம் முற்றிலும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகள், பாதுகாக்கப்பட்ட செயற்கைக்கோள் இணைப்புகள் மற்றும் மின்னணு தாக்குதல்களைத் தாங்கும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
ரஷ்யாவின் அதிபர் மற்றும் மிக உயரிய ராணுவ அதிகாரிகளை ஏற்றிச் செல்லும் பிரத்யேக 'ரோசியா ஸ்பெஷல் ஃபிளைட் ஸ்குவாட்' என்ற அரசு விமானப் பிரிவால் மட்டுமே இது இயக்கப்படுகிறது.
பின்னணி
ஈரானில் தரை இறங்கியதன் பின்னணி: ராணுவ ஆலோசனையா?
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்கப் படைகள் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைத் தளங்கள் மற்றும் கடலோர ராணுவ உள்கட்டமைப்புகள் மீது அடுத்தடுத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த தாக்குதல் எல்லை குவைத், பஹ்ரைன், ஜோர்டான் போன்ற அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது. இத்தகைய கடுமையான பிராந்திய நெருக்கடிக்கு மத்தியில், சாதாரண தூதரக பயணங்களுக்கு பயன்படுத்தப்படாத இந்த 'டூம்ஸ்டே' விமானம் டஹ்ரானுக்கு அனுப்பப்பட்டிருப்பது, மாஸ்கோ மற்றும் தெஹ்ரான் இடையே உயர்மட்ட ராணுவ ஒருங்கிணைப்பு, உளவுத்துறை பகிர்வு அல்லது அவசரகால பாதுகாப்புத் திட்டமிடல் ஆகியவை குறித்து ஆலோசிப்பதற்காக இருக்கலாம் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மூலோபாயம்
அரிதான மற்றும் மூலோபாய சொத்து
ரஷ்யா தனது உள்நாட்டு விமான உற்பத்தியை அதிகரித்து, வெளிநாட்டு நிறுவனங்களின் மீதான சார்பைக் குறைக்க திட்டமிட்டிருந்தாலும், இந்த Tu-214 வகை விமானங்களின் உற்பத்தி மிகவும் மெதுவாகவே நடந்து வருகிறது.
2028-க்குள் ஆண்டுக்கு 20 விமானங்களை தயாரிக்க ரஷ்யா இலக்கு நிர்ணயித்துள்ள போதிலும், தற்போது இந்த வகை விமானங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே ரஷ்ய அரசிடம் உள்ளன.
இவ்வளவு அரிய மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாதுகாப்பு விமானத்தை ஈரான் போர்க்களத்திற்கு ரஷ்யா அனுப்பியிருப்பது, இரு நாடுகளுக்கும் இடையே பலமடைந்து வரும் ராணுவக் கூட்டணியை உலக நாடுகளுக்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.