ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? என்ன சொல்கிறார் புதின்?
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுக்கப் போவதாக ரஷ்யா அறிவித்தது. அப்போதிலிருந்து, 10 மாதங்களாக தொடர்ந்து உக்ரைனில் போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் ரஷ்யாவின் கைப்பிடிக்குள் வந்துவிட்டது. மற்ற நகரங்கள் மீது டிரௌன்கள் மூலமாகவும் குண்டுகள் மூலமாகவும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ரஷ்யா, உக்ரைனின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்ததில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடைபெற்று கொண்டிருக்கும் மிக மோசமான போர் இதுவாகும்.
உக்ரைன் போரில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள்!
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆயுத ஆதரவு தந்து உதவும்படி பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். உக்ரைனின் மின் கம்பங்களையும் கட்டடங்களையும் குறி வைத்து ரஷ்ய டிரோன்கள் தாக்கி இருக்கின்றன. இதனால் மின் இணைப்புகள் அனைத்தும் திட்டமிட்டு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற தாக்குதலை நடத்தி கொண்டிருந்த 28 டிரோன்களில் 23 டிரோன்களை உக்ரேனியர்கள் நேற்று(டிச:20) தகர்த்து எறிந்திருக்கின்றனர். நேற்று, ரஷ்ய அதிபர் புதின், பெலாரஸ் நாட்டின் பிரதிநிதியான அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சந்தித்தார். அப்போது, லுகாஷென்கோ தாங்கள் இந்த போரில் எந்த ஒரு பங்கும் வகிக்கப்போவதில்லை என்று பேசி இருந்தார். இருந்தாலும், உக்ரைன் நாட்டுடனும் இந்த நாடு ஒரு எல்லையைப் பகிர்வதால் இவர்கள் ரஷ்யாவோடு கைகோர்த்து விடுவார்களோ என்ற பயம் உக்ரைனுக்கு எழுந்துள்ளது.