
மெட்டாவின் செய்தித் தொடர்பாளரை தேடப்படும் நபர்கள் பட்டியலில் இணைத்த ரஷ்யா
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவைச் சேர்ந்த சமூக வலைத்தள நிறுவனமான மெட்டாவின் செயதித் தொடர்பாளரான ஆண்டி ஸ்டோனை குறிப்பிடப்படாத குற்றச்சாட்டுகளுக்காக தேடப்படுபவர்களின் பட்டியலில் இணைத்திருக்கிறது ரஷ்யா.
உக்ரைன் மீதான படையெடுப்பை தொடங்கிய பின்னர், ரஷ்யாவில் செயல்பட்டு வரும் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களை தடை செய்து, தனது கட்டுப்பாட்டின் கீழும் கொண்டு வந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது ரஷ்ய அரசு.
அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம், ரஷ்யாவில் மெட்டாவை தீவிரவாத நிறுவனமாக அறிவித்தது அந்நாட்டு அரசு. இது அந்நிறுவனத்தின் மீது, அந்நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்துகிறவர்கள் மீதும் குற்ற விசாரணை மேற்கொள்ளவும், அபராதங்களை விதிக்கவும் வழிவகுத்தது.
ரஷ்யா
உக்ரைன் போருக்கு பின்பான ரஷ்யாவின் நடவடிக்கை:
மெட்டாவின் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்கள் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டு விபிஎன் உதவியுடன் மட்டுமே அத்தளங்களை பயன்படுத்த முடிகிற நிலை உருவானது.
இவை மட்டுமின்றி தற்போது எக்ஸாக அறியப்படும் முந்தைய ட்விட்டர் மற்றும் ரஷ்யாவின் தன்னிச்சையான செய்தி ஊடகங்களையும் தடை செய்தது அந்நாட்டு அரசு.
இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரலில், மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஸூக்கர்பெர்க்கை ரஷ்யாவில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் பட்டியலில் இணைத்து அந்நாடு.
மேற்கண்ட நடைவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தற்போது மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரையும் தேடப்படும் நபர்கள் பட்டியலில் இணைத்திருக்கிறது ரஷ்யா.