உக்ரைன் மீது ரஷ்யாவின் கோரத் தாக்குதல்! 9 நகரங்களில் வெடிச்சத்தம்; வான்வழி பாதுகாப்பிற்குத் தவிக்கும் உக்ரைன்
செய்தி முன்னோட்டம்
உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் உட்பட 9 முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் ஏவுகணைகள் மற்றும் அதிவேக ட்ரோன்கள் மூலம் தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளன. ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் இந்தத் தாக்குதலால் உக்ரைனின் வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகள் நிலை குலைந்துள்ளன. இத்தாக்குதலில் ராணுவப் பயிற்சி மையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், துறைமுகக் உள்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தவிப்பு
பேட்ரியாட் ஏவுகணைகளுக்குத் தவிக்கும் உக்ரைன்
ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீழ்த்த அமெரிக்க தயாரிப்பான பேட்ரியாட் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் உக்ரைனிடம் போதிய அளவில் இல்லை.
ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் அமெரிக்காவிடமிருந்து புதிய ஏவுகணைகளைப் பெற உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
ரஷ்யா தொடர்ச்சியாகப் பல ஏவுகணைகளை ஏவி உக்ரைனின் வான் பாதுகாப்பை முடக்க நினைப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
உயிரிழப்புகள்
மக்கள் குடியிருப்புகள் சேதம் மற்றும் உயிரிழப்புகள்
இந்தத் தாக்குதலில் ஜபோரிழியா பகுதியில் 78 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
கீவ் நகரில் குடியிருப்பு வளாகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் சேதமடைந்தன.
ஒடேசா நகரில் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தாக்குதலில் 16 மாடி குடியிருப்பு, கல்வி நிலையங்கள் மற்றும் தானியக் கிடங்குகள் சேதமடைந்துள்ளன.
சுற்றியுள்ள ஐரோப்பிய நாடுகளின் வான் எல்லைக்குள்ளும் ட்ரோன்கள் நுழைந்துள்ளதால் அண்டை நாடுகளும் அச்சமடைந்துள்ளன.
பதிலடி
ரஷ்ய வணிக தளங்கள் மீது உக்ரைனின் பதிலடித் தாக்குதல்
ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனும் நீண்ட தூர ட்ரோன்கள் மூலம் ரஷ்ய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான வைல்ட்பெர்ரீஸ் கிடங்குகளை அழித்த பிறகு, தற்போது ஓசோன் நிறுவனத்தின் தளங்களைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் 267 ட்ரோன்களைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.