LOADING...
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணை தாக்குதல்! 11 பேர் பலி
கீவ் நகர் மீது ரஷ்யா நள்ளிரவில் நடத்திய ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணை தாக்குதல்! 11 பேர் பலி

எழுதியவர் Sekar Chinnappan
Jul 02, 2026
01:28 pm

செய்தி முன்னோட்டம்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே வருடக்கணக்கில் நீடித்து வரும் போர் தற்பொழுது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை இலக்காகக் கொண்டு, ரஷ்ய ராணுவம் நள்ளிரவில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. அதிநவீன பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளை ஏவி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், இரண்டு குழந்தைகள் உட்பட 11 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 54க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சர் இஹோர் க்ளிமென்கோ அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

ஏவுகணை தாக்குதல்

தலைநகரை உலுக்கிய நள்ளிரவு ஏவுகணை மழை

நள்ளிரவு நேரத்தில் ஒட்டுமொத்த கீவ் நகரத்தையும் அதிர வைத்த இந்த ஏவுகணை வீச்சு, சுமார் 30க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பொதுமக்களின் குடியிருப்புகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளையே ரஷ்யா குறிவைத்துத் தாக்கியுள்ளது. கீவ் நகர ராணுவ நிர்வாகத் தலைவர் திமுர் தகாசென்கோ இதுகுறித்து கூறுகையில், நகரின் முக்கிய பகுதிகளில் இருந்த 20க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் இந்தத் தாக்குதலால் கடுமையாக சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த அவசர எச்சரிக்கையைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் உயிர் பிழைப்பதற்காகப் பாதாள மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மீட்புப் பணிகள்

குடியிருப்பு பகுதிகளில் தொடரும் மீட்புப் பணிகள்

கீவ் நகரின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய இந்தத் தாக்குதல் நீடித்ததால், பல அடுக்குமாடி குடியிருப்புகள் தீப்பற்றி எரிந்துள்ளன. டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒன்பது மாடி குடியிருப்பு கட்டிடத்தின் 6 தளங்கள் இந்த ஏவுகணை வீச்சால் மொத்தமாக இடிந்து சரிந்து விழுந்துள்ளன. ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தில் ஒரு ஹோட்டல் மற்றும் இரண்டு ஐந்து மாடி குடியிருப்புகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், அங்கே காயமடைந்தவர்களுக்கு உதவ சென்ற அவசர மருத்துவ உதவியாளர் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதேபோல் டெஸ்னியான்ஸ்கி மற்றும் ஹொலோசிவ்ஸ்கி மாவட்டங்களிலும் பல மாடி கட்டிடங்களின் கூரைகள் தீப்பற்றி எரிந்ததால், மக்கள் அதற்குள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

Advertisement

அவசர கோரிக்கை

சர்வதேச நாடுகளுக்கு உக்ரைன் விடுத்துள்ள அவசர கோரிக்கை

இந்தக் கொடூரமான நள்ளிரவுத் தாக்குதலை உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா திகிலூட்டும் இரவு என்று வர்ணித்துள்ளார். மேலும், ரஷ்யாவின் இந்த தாக்குதல்களை எதிர்கொள்ள, உக்ரைனின் நட்பு நாடுகள் உடனடியாக அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஏவுகணைகளையும் தங்களுக்கு வழங்கி உதவ வேண்டும் என்று அவர் அவசரமாகக் கோரியுள்ளார். இடிபாடுகளை அகற்றும் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.

Advertisement