ராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்தது: இந்தியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தை ரஷ்யா அங்கீகரித்தது
செய்தி முன்னோட்டம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு முக்கிய இராணுவ ஒப்பந்தத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ஸ்டேட் டூமா (State Duma) ஒப்புதல் அளித்துள்ளது. RELOS என பெயரிடப்பட்ட இந்த பரஸ்பர தளவாட ஆதரவுக்கான பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளின் இராணுவப் படைகளுக்கும் இடையேயான பரஸ்பர தளவாட ஆதரவிற்கான நடைமுறைகள் முறைப்படுத்தப்படும். ராணுவப் படைப்பிரிவுகள், போர்க் கப்பல்கள் மற்றும் இராணுவ விமானங்கள் ஆகியவை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லவும், அவற்றுக்கு தேவையான அனைத்து தளவாட உதவிகளையும் (Logistics) பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
விவரங்கள்
RELOS ஒப்பந்தத்தின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள்
இந்த நடைமுறைகள் கூட்டுப் பயிற்சிகள், இராணுவப் பயிற்சி, மனிதாபிமான உதவிகள், இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரிடர் நிவாரணப் பணிகள் மற்றும் இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளும் பிற சமயங்களில் பயன்படுத்தப்படும். இந்த ஒப்பந்தத்தின் அங்கீகாரம், ரஷ்யா மற்றும் இந்தியாவின் போர்க் கப்பல்கள் துறைமுகங்களுக்கு வந்து செல்லவும், இரு நாடுகளின் வான்வெளியைப் பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ளவும் எளிதாக்கும். இதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பு மேலும் பலப்படும் என்று டூமா சபாநாயகர் வியாசெஸ்லாவ் வோலோடின் தெரிவித்துள்ளார். அதிபர் புடின் டெல்லிக்கு வரும்போது இந்த ஒப்பந்தம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.