கத்தார் LNG ஆலை வெடிவிபத்து: 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் பலி என தூதரகம் தகவல்
செய்தி முன்னோட்டம்
கத்தாரின் ராஸ் லஃப்பான் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் இந்தியர்கள் என்று தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இதில் மூவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சோகம். விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் தற்பொழுது ஆபத்தான கட்டத்தை தாண்டி, நிலையான உடல்நலத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் எரிசக்தி துறை அமைச்சர் சாத் அல்-காபி செய்தியாளர்களிடம் பேசுகையில், உயிரிழந்தவர்கள் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தியதோடு, அவர்களது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.
விபத்து
தொழில்நுட்ப விபத்து; ஏற்றுமதி பாதிக்கப்படவில்லை
ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் உள்ள பர்சான் உள்ளூர் எரிவாயு விநியோக ஆலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், "இது எந்தவொரு சதிவேலையோ அல்லது ஆக்கிரமிப்புத் தாக்குதலோ அல்ல; இது ஒரு தொழில்நுட்ப விபத்து. அவசரப் பராமரிப்புப் பணிகளுக்காக 2025 டிசம்பர் முதல் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ஆலை, இரண்டு நாட்களுக்கு முன்புதான் மீண்டும் இயக்கப்பட்டது" என்று விளக்கமளித்துள்ளார். மேலும், இந்த விபத்தால் கத்தாரின் ஒட்டுமொத்த எல்என்ஜி ஏற்றுமதி நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வெடிவிபத்தின் தாக்கம் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கத்தார் தலைநகர் தோஹா வரை எதிரொலித்ததாகவும், அங்குள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் அதிர்ந்ததால் மக்களிடையே பெரும் பயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.