சிறைவைக்கப்பட்ட ரஷ்ய அதிபர் புடினின் அரசியல் எதிரி திடீர் மாயம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தீவிர அரசியல் எதிரியாக கருதப்படும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் இருந்து காணாமல் போனதாக அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய ஒரு வாரமாக அவர்களால், நவல்னியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவரது வழக்கறிஞர்களாலும் அவரை அணுக முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் உட்பட புடினின் கொள்கைகளை பலவற்றை நவல்னி கடுமையாக எதிர்த்து வருகிறார் . புடின் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, தற்போது நவல்னி காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பலருக்கும் சந்தேகத்தை வரவழைத்துள்ளது.
நீதிமன்றத்திற்கு வரவில்லை, சிறை பட்டியலிலும் இல்லை
நவல்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்ற விசாரணையில் நவல்னி கலந்து கொள்ளவில்லை என்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அவர் விசாரணைக்கு வராததற்கு சிறை அதிகாரிகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக காரணம் கூறினாலும், நவல்னி, மாஸ்கோவிற்கு அருகிலுள்ள விளாடிமிர் பகுதியில் உள்ள தண்டனைக் காலனியான "IK-6" இல் கைதியாக பட்டியலிடப்படவில்லை என்பதை அவரது வழக்கறிஞர்கள் பின்னர் கண்டுபிடித்தனர், என கிரா கூறினார். நவல்னி வேறு சிறைக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்றும், எனினும் அவரது இருப்பிடம் குறித்த தகவல்கள் எதுவுமே தெரியவில்லை என்று கிரா எக்ஸ்இல் பதிவிட்டுள்ளார்.
நவல்னியின் உடல்நிலை
கிரா யர்மிஷ் மேலும், சமீப காலமாக உடல்நலமும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறினார். அவர் கடந்த வாரம் தனது செல்லில் நோய்வாய்ப்பட்டு மயக்கமடைந்தாகவும், IV திரவங்கள் தேவைப்படுவதாகவும் கூறினார். 47 வயதான நவல்னி, தீவிரவாத நடவடிக்கைகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஏறக்குறைய 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். தற்போது அவர் காணாமல் போனது, புடினின் அதிபர் தேர்தலுடன் தொடர்புடையது என்று நவல்னியின் ஆதரவாளர்கள் குழு தெரிவிக்கிறது புதின் உயிருடன் இருக்கும் வரை, தனக்கு சிறையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று தான் நம்பவில்லை என்று நவல்னி சமீபத்தில் கூட கூறினார்.