LOADING...
நிபந்தனையுடன் ஒரு வருடத்திற்கு புதிய START ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்காவிடம் ரஷ்ய அதிபர் புடின் முன்மொழிவு
ஒரு வருடத்திற்கு புதிய START ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்காவிடம் புடின் முன்மொழிவு

நிபந்தனையுடன் ஒரு வருடத்திற்கு புதிய START ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்காவிடம் ரஷ்ய அதிபர் புடின் முன்மொழிவு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 22, 2025
07:44 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே எஞ்சியிருக்கும் கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தமான புதிய START (New Strategic Arms Reduction Treaty) ஒப்பந்தத்தை ஒரு வருடத்திற்கு நீட்டிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்மொழிந்துள்ளார். ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய புடின், இந்த குறுகிய கால நீட்டிப்பு அமெரிக்கா பரஸ்பர நடவடிக்கையை எடுப்பதைப் பொறுத்தது என்று கூறினார். இரு நாடுகளுக்கும் இடையே பயன்படுத்தப்படும் அணு ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் குண்டு வீசும் விமானங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் இந்த ஒப்பந்தம், பிப்ரவரி 5, 2026 அன்று காலாவதியாக உள்ளது.

ஆயுத கட்டுப்பாடு

எதிர்கால ஆயுதக் கட்டுப்பாடு 

விளாடிமிர் புடின், இந்த நீட்டிப்பு உலகளாவிய அணு ஆயுத பரவலுக்கு எதிரான நலன்களுக்கு உதவும் என்றும், புதிய ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தம் தொடர்பான எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கு வழி திறக்கும் என்றும் வலியுறுத்தினார். "புதிய START ஒப்பந்தத்தின் கீழ் உள்ள மைய அளவுகோல்களுக்கு ரஷ்யா ஒரு வருடத்திற்கு தொடர்ந்து கட்டுப்பட தயாராக உள்ளது." என்று அவர் கூறினார். ரஷ்யாவின் இந்த தன்னிச்சையான, சுய-கட்டுப்பாடுகளை அமெரிக்கா தற்போதைய சமநிலையை மீறாமல் பரஸ்பரம் நடந்தால் மட்டுமே தொடரும் என்றும் குறிப்பிட்டார்.

ஒப்பந்தம்

2010 இல் கையெழுத்தான புதிய START ஒப்பந்தம்

2010 இல் கையெழுத்திடப்பட்ட புதிய START ஒப்பந்தம், குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ளது. பிப்ரவரி 2023 இல், ரஷ்யா, உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாகக் கூறி, ஒப்பந்தத்தின் கள ஆய்வுகளில் பங்கேற்பதை நிறுத்தியது. இருப்பினும், அணு ஆயுதங்களின் எண்ணிக்கையில் உள்ள வரம்புகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக மாஸ்கோ வலியுறுத்தியது. இரு தரப்பும் புதிய ஒப்பந்தத்தில் ஆர்வம் காட்டியபோதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவையும் அதில் சேர்க்க பரிந்துரைத்துள்ளார். எனினும், உக்ரைனில் நடந்து வரும் போர் பேச்சுவார்த்தைகளுக்கான முக்கிய தடையாக உள்ளது.