BBC-க்கு எதிராக டிரம்ப் ரூ.80,000 கோடி வழக்கு: உரையை திரித்து கூறியதாக குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டனை சேர்ந்த புகழ்பெற்ற ஒலிபரப்பு நிறுவனமான பிபிசி (BBC)-க்கு எதிராக மிக பெரிய அளவில் சட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளார். ஜனவரி 6, 2021 அன்று அவர் ஆற்றிய உரையை திரித்து காட்டியதாக கூறி, அந்த நிறுவனத்திற்கு எதிராக 10 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 80,000 கோடி) நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார். 2024-ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிபிசியின் 'பனோரமா' (Panorama) நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில், அதிபர் டிரம்ப் ஆற்றிய உரையின் பகுதிகள் "வேண்டுமென்றே, தீங்கிழைக்கும் நோக்குடன் மற்றும் ஏமாற்றும் விதமாகத் திரிக்கப்பட்டுள்ளன" என டிரம்ப் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
வழக்கு விவரங்கள்
திட்டமிட்டு திரிக்கப்பட்ட உரை என வழக்கு தொடரப்பட்டுள்ளது
டிரம்ப்பின் சட்டக் குழுவின் செய்தித் தொடர்பாளர்,"பிபிசி, 2024 அதிபர் தேர்தலில் தலையிட வெளிப்படையாக முயலும் முயற்சியில் அதிபர் டிரம்ப்பின் உரையைத் திரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஒரு அவதூறு வழக்கு, புளோரிடாவின் ஏமாற்று மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கு என இரண்டு பிரிவுகளின் கீழ் தலா 5 பில்லியன் டாலர் என மொத்தம் 10 பில்லியன் டாலர் நஷ்டஈடு கோருவதாக ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. வழக்கின் படி, டிரம்ப் ஆதரவாளர்களை Capitol-க்கு அணிவகுத்து செல்லுமாறு "நரகத்தைப் போல போராடு" என்ற சொற்றொடருடன் வலியுறுத்திய கருத்துக்களை இந்த நிகழ்ச்சி இணைத்தது, அதே நேரத்தில் போராட்டங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்த தனி பத்தியை விலக்கியது.