H-1B விசா உட்பட பல்வேறு அமெரிக்கா விசாக்களுக்கான பிரீமியம் கட்டணம் 12% உயர்வு
அதிகமாக பயன்படுத்தப்படும் H-1B விசா உள்ளிட்ட பல்வேறு வகை விசாக்களுக்கு பிரீமியம் கட்டணத்தை 12% உயர்த்தியுள்ளதாக, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அண்மையில் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் சிறப்பு தொழில்களில், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அமெரிக்க நிறுவனங்களுக்கு H-1B விசா உதவுகிறது. இந்த வகை விசாக்களை பெற, நிறுவனங்களே ஊழியர்களுக்கு ஸ்பான்சர் செய்ய வேண்டும். வரவிருக்கும் பிப்ரவரி 26 முதல், H-1B விசா விண்ணப்பங்களுக்கான புதிய கட்டணம் $2,805 (₹2,33,513) ஆக உயர்கிறது. தற்போது இது $2,500 (₹2,08,122) ஆக உள்ளது. டிசம்பர் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வின்படி, படிவங்கள் I-129, I-140, I-539, and I-765 ஆகிய விசாக்களுக்கும் 12% பிரீமியம் கட்டணம் உயர்கிறது.
பணவீக்கம் காரணமாக விசா கட்டணங்கள் உயர்வு
2024 ஆம் ஆண்டிற்கான அவர்களின் குடியேற்ற பட்ஜெட் திட்டத்தில் இந்த புதுப்பிக்கப்பட்ட செயலாக்கக் கட்டணங்களை, நிறுவனங்கள் காரணியாகக் கொல்ல அமெரிக்க அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். H-1B விசாவிற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் மார்ச் மாதம் தொடங்கும். அதன் பின்னர் குலுக்கல் முறையில் தேர்வாகும் நபர்களுக்கு இவ்வகை விசா வழங்கப்படுகிறது. ஜூன் 2021 முதல் ஜூன் 2023 வரையிலான பணவீக்கம் காரணமாகவே, விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில விசா வகைகளில் நீங்கள் பிரீமியம் முறையை தேர்ந்தெடுக்கும் போது, உங்களுக்கான விசா செயலாக்கம் விரைவில் முடிக்கப்படும். படிவம் I-439 மற்றும் படிவம் I-765 30 நாட்களிலும், H-1B பிரீமியம் செயலாக்கத்திற்கு 15 நாட்களிலும், உங்களுக்கு விசா கிடைக்குமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.