LOADING...
வெனிசுலாவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்.. கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்! சுனாமி எச்சரிக்கை
வெனிசுலாவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்

வெனிசுலாவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்.. கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்! சுனாமி எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Jun 25, 2026
08:00 am

செய்தி முன்னோட்டம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்த சில நிமிட இடைவெளியில் ஏற்பட்ட இரண்டு பயங்கர நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.1 மற்றும் 7.5 ஆகப் பதிவான இந்த அசுர நிலநடுக்கங்களால் தலைநகர் கரகஸ் உட்பட பல பகுதிகளில் பிரம்மாண்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, கரீபியன் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

சில நிமிட இடைவெளி

சில நிமிடங்களில் அடுத்தடுத்து தாக்கிய 2 நிலநடுக்கங்கள்

அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, முதற்கட்டமாக கரீபியன் கடற்கரைக்கு அப்பால், மோரோன் நகருக்கு மேற்கே, தலைநகர் கரகஸிலிருந்து 168 கிமீ தொலைவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் 13 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள், அதே பகுதியில் அதைவிடக் கடுமையான 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது. இது பூமிக்கு அடியில் வெறும் 10 கிமீ ஆழத்திலேயே ஏற்பட்டதால் சேதத்தின் வீரியம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை

சுனாமி எச்சரிக்கை மற்றும் தலைநகரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன

இந்த நிலநடுக்கத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து, அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், பியூர்ட்டோ ரிகோ மற்றும் வெர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. நிலநடுக்கத்தின் போது தலைநகர் கரகஸில் இருந்த அடுக்குமாடி குடியிருப்புகள் பயங்கரமாக ஆடியதால், மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். கரகஸின் முக்கியப் பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் இடிந்து விழுந்ததில் அந்தப் பகுதியே பிரம்மாண்ட தூசிக் மேகங்களால் சூழப்பட்டுப் போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது.

Advertisement

மீட்புப் பணியில் ராணுவம்

100 ஆண்டுகளில் இல்லாத மாபெரும் பேரிடர்

வெனிசுலா நாடு கடந்த ஒரு நூற்றாண்டில் கண்டிராத மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். இடிபாடுகளுக்குள் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, 1821 ஆம் ஆண்டு ஸ்பெயினிடமிருந்து வெனிசுலா சுதந்திரம் பெறுவதற்குக் காரணமான முக்கிய ராணுவ வெற்றியைக் கொண்டாடும் தேசிய விடுமுறை தினத்தில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளதால், மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்த சமயத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

Advertisement

யாரும் வீட்டிற்குள் செல்ல வேண்டாம்

உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

இதுகுறித்து வெனிசுலா நாட்டின் உள்துறை அமைச்சர் டயோஸ்டாடோ கபெல்லோ அரசுத் தொலைக்காட்சியில் அவசரமாகப் பேசுகையில், கரகஸின் அல்தாமிரா உள்ளிட்ட மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தொடர் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் யாரும் அவசரப்பட்டுத் தங்களது வீடுகளுக்குள் செல்ல வேண்டாம் என்றும், பொது இடங்களில் திறந்தவெளியில் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு வாகனங்கள் விரைந்து செல்ல ஏதுவாகப் பொதுமக்கள் சாலைகளை ஆக்கிரமிக்க வேண்டாம் என்றும் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement