பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் Gen Z மாணவர்கள் போராட்டம் வெடிப்பு
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த வன்முறைப் போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது கல்வித்துறை மாற்றங்களை எதிர்த்து Gen Z மாணவர்கள் தலைமையில் மற்றொரு பெரிய போராட்டத்தைச் சந்தித்துள்ளது. ஆரம்பத்தில் கட்டண உயர்வு மற்றும் புதிய மதிப்பீட்டு முறைக்கு எதிராக அமைதியாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், ஷெபாஸ் ஷெரிப் தலைமையிலான அரசுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. கடந்த மாதம் (அக். 30) இடைநிலை முதலாம் ஆண்டுத் தேர்வு முடிவுகள் ஆறு மாதத் தாமதத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்டன. இதில், மாணவர்கள் புதிய மின்னணு மதிப்பெண் (e-marking) முறை காரணமாக எதிர்பாராத வகையில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றதாகப் புகார் கூறினர்.
தேர்ச்சி
தேர்வு எழுதாத பாடங்களில் கூட தேர்ச்சி
சில மாணவர்கள் தேர்வு எழுதாத பாடங்களில் கூடத் தேர்ச்சி பெற்றிருந்தனர். அத்துடன், ஒரு பாடத்தை மறுமதிப்பீடு செய்ய ₹1,500 என நிர்ணயிக்கப்பட்ட அதிக கட்டணத்தையும் மாணவர்கள் எதிர்த்தனர். முசாபராபாத்தில் உள்ள முக்கியப் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம், அடையாளம் தெரியாத நபர் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வன்முறையாக மாறியது. சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், போராட்டக்காரர்கள் டயர்களை எரிப்பது மற்றும் அரசுக்கு எதிராகக் கோஷமிடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. மாணவர்களின் கோரிக்கைகள் இப்போது வகுப்பறையைத் தாண்டி, மோசமான உள்கட்டமைப்பு, சுகாதாரப் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து வசதிக் குறைபாடு போன்ற பரந்த பிரச்சினைகளாக விரிவடைந்துள்ளது.