ரஷ்யாவை அணு ஆயுதப் பயன்பாட்டிலிருந்து தடுத்தாரா பிரதமர் மோடி? போலந்து அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
செய்தி முன்னோட்டம்
உக்ரைன் போரின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தந்திரோபாய அணு ஆயுதங்களைப பயன்படுத்துவதை தடுப்பதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிக முக்கியப் பங்காற்றினார் என்று போலந்து நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் விளாடிஸ்லாவ் தியோபில் பார்டோசெவ்ஸ்கி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா-போலந்து கூட்டு பொருளாதாரக் குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச அளவில் புடின் மதிக்கும் ஒரு சில உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என்று சுட்டிக்காட்டினார்.
செல்வாக்கு
புடின் மீது செல்வாக்கு செலுத்தும் மோடி
இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான பல தசாப்த கால மூலோபாய உறவுகளின் காரணமாக, பிரதமர் மோடியின் ஆலோசனைகளை அதிபர் புடின் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார் என்று பார்டோசெவ்ஸ்கி குறிப்பிட்டார்.
2022 ஆம் ஆண்டின் இறுதியில், போர் மிகவும் நெருக்கடியான நிலையை எட்டியபோது, அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று புடினை ஒப்புக்கொள்ள வைப்பதில் பிரதமர் மோடி தனது செல்வாக்கை வெற்றிகரமாக பயன்படுத்தியதாக அவர் கூறினார்.
இராஜதந்திர அணுகுமுறை
"இது போருக்கான யுகம் அல்ல"
நான்காவது ஆண்டாக தொடரும் இந்த உக்ரைன் போரில், இந்தியாவின் இராஜதந்திர அணுகுமுறையை இந்த அறிக்கை மீண்டும் உலக அரங்கில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
கடந்த 2022 செப்டம்பரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், "இன்றைய யுகம் போருக்கானது அல்ல" என்று பிரதமர் மோடி புடினிடம் நேரடியாகக் கூறியிருந்தது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும், இந்தியா தனது தேசிய நலன் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.
ஆதரவு
ஈரான் விவகாரம் மற்றும் போலந்தின் ஆதரவு
வளைகுடா பகுதியில் அமைதியை பேணவும், சர்வதேச கடல் வர்த்தகம் தடையின்றி நடைபெறவும் இந்தியா மேற்கொண்டு வரும் இராஜதந்திர சமநிலையான அணுகுமுறையையும் போலந்து அமைச்சர் வெகுவாக பாராட்டினார்.
மேலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் (UNSC) இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கான தங்களின் நீண்ட கால ஆதரவை போலந்து மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், தூதரக வழிமுறைகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் வெளியுறவு கொள்கையானது, உலகளாவிய மோதல்களை தடுப்பதில் மிக முக்கிய பங்காற்றி வருவதாக சர்வதேச நாடுகள் ஒப்புக்கொண்டு வருகின்றன.