ஆஸ்திரிய அதிபரை சந்தித்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை(உள்ளூர் நேரம்) தனது பயணத்தின் ஒரு பகுதியாக, வியன்னாவில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாமரை சந்தித்தார். இந்த பயணத்தின் போது, இரு நாடுகளும் தங்களின் இருதரப்பு உறவை மேலும் ஆழப்படுத்துவது மற்றும் பல புவிசார் அரசியல் சவால்களில் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவை குறித்து விவாதிப்பார்கள். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, "அதிபர் கார்ல் நெஹாமரின், அன்பான வரவேற்புக்கு நன்றி. நாளையும் நமது விவாதங்களை எதிர்நோக்குகிறேன். மேலும் உலக நன்மைக்காக நமது நாடுகள் தொடர்ந்து இணைந்து செயல்படும்" என்று கூறினார்.
இராஜதந்திர உறவுகளை நிறுவி 75வது ஆண்டுகள் நிறைவாகிறது
முன்னதாக, வியன்னாவில் தரையிறங்கிய பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் வரவேற்றார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்குச் செல்லும் முதல் பயணம் இதுவாகும். கடைசியாக 1983இல் இந்திரா காந்தி அங்கு சென்றிருந்தார். வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை நிறுவி 75வது ஆண்டுகள் நிறைவாகிறது. அதை கொண்டாடும் வகையில், பிரதமர் மோடியின் இந்த முக்கியமான பயணம் இந்தியா-ஆஸ்திரியா உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை சேர்க்கும்." என்று கூறியுள்ளார். தனது பயணத்தின் போது, பிரதமர் மோடி ஆஸ்திரிய குடியரசுத் தலைவர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லனை சந்திக்கிறார். மேலும் புதன்கிழமை ஆஸ்திரியாவின் அதிபர் கார்ல் நெஹாமரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவார்.