ரஷ்ய வாகன உற்பத்தியாளர்களிடம் இந்தியாவை உதாரணம் காட்டி பாராட்டிய ரஷ்ய அதிபர் புதின்
செவ்வாயன்று ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளைப் பாராட்டிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவித்து பிரதமர் மோடி "சரியானதை" செய்கிறார் என்று தெரிவித்துள்ளார். 8வது கிழக்கு பொருளாதார மன்றத்தில்(EEF) ரஷ்ய தயாரிப்பு கார்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஷ்ய அதிபர், பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் வானங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், பிரதமர் மோடியின் தலைமையிலான இந்தியா தனது கொள்கைகளின் மூலம் ஏற்கனவே இதற்கான முன்மாதிரிகளை அமைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்ய நிகழ்ச்சியில் பேசிய அதிபர் புதின் கூறியதாவது:
உங்களுக்குத் தெரியும், நம்மிடம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்கள் முன்பு இல்லை. ஆனால் தற்போது நம்மிடம் அது உள்ளது. 1990களில் நாம் அதிக அளவில் வாங்கிய மெர்சிடிஸ் மற்றும் ஆடி கார்களை விட நமது கார்கள் எளிமையானவை என்பது உண்மைதான். ஆனால் அது ஒரு பிரச்சினை அல்ல. நமது பல கூட்டாளிகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உதாரணமாக இந்தியா. அவர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் கவனம் செலுத்துகின்றனர். 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிப்பதில் பிரதமர் மோடி சரியானதைச் செய்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் சொல்வது சரிதான். என்று அதிபர் புதின் கூறியுள்ளார்.