Page Loader
பன்னுன் கொலை சதி வழக்கு: தான் குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா வாதம்

பன்னுன் கொலை சதி வழக்கு: தான் குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா வாதம்

எழுதியவர் Sindhuja SM
Jun 18, 2024
10:43 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க மண்ணில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் நிகில் குப்தா, நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் திங்களன்று தான் குற்றமற்றவர் என்று வாதிட்டார். அமெரிக்கக் குடிமகனான பன்னுனைக் கொலை செய்ய இந்திய அரசாங்கம் நியமித்த அடியாள் தான் நிகில் குப்தா என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கடந்த ஆண்டு செக் குடியரசில் கைது செய்யப்பட்டார். 52 வயதான குப்தா சமீபத்தில் செக் குடியரசில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்நிலையில், குப்தா ஒரு அமெரிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அமெரிக்கா 

ஜூன் 28ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது 

இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஜூன் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. நிகில் குப்தா அப்போது மீண்டும் ஆஜராவார். எனினும் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவரது வழக்கறிஞர் ஜெஃப்ரி சாப்ரோ, இந்த வழக்கை "சிக்கலானது" என்று விவரித்துள்ளார். மேலும் நீதிமன்றத்தில் தீவிரமான தற்காப்பைத் தொடரப்போவதாகவும் ஜெஃப்ரி சாப்ரோ கூறியுள்ளார். இதற்கிடையில், செக் குடியரசு காவல்துறை, நிகில் குப்தாவை அமெரிக்காவிற்கு நாடு கடத்தும் போது எடுக்கப்பட்ட முதல் வீடியோ காட்சிகளை சமூக ஊடக தளமான X இல் பகிர்ந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

நிகில் குப்தாவின் வீடியோ காட்சி