
அரிய கனிமங்களின் முதல் தொகுதியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது பாகிஸ்தான்: ரகசிய ஒப்பந்தங்கள் குறித்து சர்ச்சை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க நிறுவனமான யுஎஸ் ஸ்ட்ராடஜிக் மெட்டல்ஸுடன் (யுஎஸ்எஸ்எம்) கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தனது முதல் அரிய வகை கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், இந்தக் கனிமங்கள் மற்றும் துறைமுகம் தொடர்பான ரகசிய ஒப்பந்தங்கள் குறித்து அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளது. ஏற்றுமதியான மாதிரி கனிமங்களில் அண்டிமனி, செம்பு மற்றும் நியோடைமியம், பிரசியோடைமியம் போன்ற அரிய வகை தாதுக்கள் அடங்கும். இந்த ஏற்றுமதியானது, யுஎஸ்எஸ்எம் நிறுவனம் பாகிஸ்தானின் ராணுவ பொறியியல் பிரிவான ஃபிரான்டியர் ஒர்க்ஸ் ஆர்கனைசேஷனுடன் செப்டம்பரில் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதலீடு
$500 மில்லியன் முதலீடு
இந்த ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தானில் கனிமச் செயலாக்க வசதிகளை நிறுவ சுமார் $500 மில்லியன் முதலீடு செய்ய உறுதியளிக்கப்பட்டுள்ளது. யுஎஸ்எஸ்எம் இந்த விநியோகத்தை பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மூலோபாயப் பங்காளித்துவத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்று பாராட்டியுள்ளது. $6 டிரில்லியன் மதிப்புள்ள கனிம வளம் இருப்பதாக மதிப்பிடப்பட்ட போதிலும், பாகிஸ்தான் நிலையான வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கத் திணறி வருகிறது. இந்த ஒப்பந்தங்கள் குறித்து, பிடிஐ கட்சி அரசு மீது அழுத்தம் கொடுத்து, நியாயமற்ற மற்றும் ரகசிய ஒப்பந்தங்களின் முழு விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தான் தனது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பஸ்னி துறைமுகத்தையும் அமெரிக்காவிற்கு தாரைவார்க்க தயாராகி வருவதற்கும் உள்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.