பாகிஸ்தானில் 4 பெரிய மாகாணங்களை உடைத்து 15 புதிய மாநிலங்கள்? ராணுவத் தளபதி அசிம் முனீரின் மாஸ்டர் பிளான்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் அரசியல் மற்றும் புவியியல் வரைபடத்தில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர அந்நாட்டு ராணுவம் திட்டமிட்டு வருகிறது. தற்போது பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் என 4 பெரிய மாகாணங்களாக உள்ள பாகிஸ்தானை, 12 முதல் 15 புதிய மாநிலங்களாகவோ அல்லது 160 சிறிய நிர்வாக பகுதிகளாகவோ பிரிக்க ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் விரும்புவதாக 'தி எகனாமிஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.
காரணம்
நிர்வாகச் சீர்திருத்தமா? அதிகாரப் பிடியா?
பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையான 24 கோடியில், பாதியை(12.8 கோடி) பஞ்சாப் மாகாணம் மட்டுமே கொண்டுள்ளது.
இதனால் கிராமப்புற மக்களுக்கு அரசு சேவைகள் சரியாகச் சென்றடைவதில்லை என்றும், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூடக் கிடைப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இவ்வளவு பெரிய மாகாணங்களை நிருவகிப்பது கடினம் என்பதே பாகிஸ்தானின் பொருளாதார பின்னடைவுக்கு காரணம் என ராணுவத் தரப்பு கூறினாலும், இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
பஞ்சாபில் நவாஸ் ஷெரீப்பின் PML-N கட்சியும், சிந்துவில் பூட்டோவின் PPP கட்சியும் பலமிக்க அரசியல் அதிகார மையங்களாக விளங்குகின்றன.
இம்மாநிலங்களை சிறிய துண்டுகளாக பிரிப்பதன் மூலம், இந்த முதன்மை அரசியல் கட்சிகளின் செல்வாக்கைக் குறைத்து, அரசின் பிடியை மேலும் வலுவாக்க முடியும் எனக்கருதப்படுகிறது.
சவால்
உள்நாட்டுப் பதற்றமும் சவால்களும்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் கைபர் பக்துன்க்வா மாகாணத்திலிருந்து இஸ்லாமாபாத் நோக்கிப் பேரணி நடத்தி வருகின்றனர்.
மற்றொருபுறம் பலுசிஸ்தானில் பிரிவினைவாத போராட்டங்களும், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பொருளாதாரப் போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன.
இத்தகைய கொந்தளிப்பான சூழலில் மாகாணங்களின் எல்லைகளை மாற்றியமைப்பது பாகிஸ்தானின் அதிகார சமநிலையையே தலைகீழாக மாற்றக்கூடும்.