பாக் கப்பலில் இருந்து அணுசக்தி சரக்குகளை கைப்பற்றிய இந்தியா: பாகிஸ்தான் கண்டனம்
மும்பையில் இந்திய ஏஜென்சிகளால் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் கப்பலில் "வணிக" பொருட்கள் தான் இருந்தது என்றும், அணுசக்தி திட்டத்திற்கான இயந்திரங்கள் அவை அல்ல என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது. ஜனவரி 23 அன்று, சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த 'சிஎம்ஏ சிஜிஎம் அட்டிலா' என்ற கப்பல் மும்பையின் நவா ஷேவா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின (டிஆர்டிஓ) குழு, அதில் இருந்து சரக்கை ஆய்வு செய்ததாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். அதிலிருந்து ஒரு கணினி எண் கட்டுப்பாட்டு இயந்திரம் (CNC) கைப்பற்றப்பட்டது. இந்த இயந்திரம் அணுசக்தி திட்டங்களில் பயன்படுத்தப்படுபவை என்பதால் அதை இந்தியா பறிமுதல் செய்தது.
இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கண்டனம்
அதோடு, இது பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்திற்காக எடுத்து செல்லப்பட்டது என்றும் இந்திய அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்நிலையில், தற்போது அதை நிராகரித்திருக்கும் பாகிஸ்தான், கராச்சியை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு தேவையான வணிக லேத் இயந்திரத்தை தான் அந்த கப்பல் ஏற்றி சென்றடு என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதை நியாயமற்ற நடவடிக்கை என்று கூறிய பாக் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் இந்த விஷயத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன என்றும், இந்தியா சர்வதேச விதிமுறைகளை மீறியுள்ளது என்றும் கூறியுள்ளனர். "வணிகப் பொருட்களைக் கைப்பற்றிய இந்தியாவின் போக்கை பாகிஸ்தான் கண்டிக்கிறது." என்றும் இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.