100 லட்சம் ஆஸ்திரேலியர்கள் இணையம், தொலைபேசி சேவைகள் இல்லாமல் தவிப்பு: காரணம் என்ன?
இன்று 100 லட்சத்துக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான 'ஆப்டஸ்' நிறுவனத்தில் விவரிக்க முடியாத செயலிழப்புகள் ஏற்பட்டதை அடுத்து, இந்த மிகப்பெரும் தொலை தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டது. அவசர சேவைகளுக்கான தொலைபேசி இணைப்புகள், மின்னணு கட்டணம் செலுத்தும் அமைப்புகள் போன்ற நாட்டின் மிக முக்கியமான தகவல் தொடர்புகளை சீர்குலைத்த இந்த தொலை தொடர்பு துண்டிப்பு எதனால் ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்து வருவதாக 'ஆப்டஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தொலைதொடர்பு துண்டிப்பு ஹேக்கிங் அல்லது சைபர் தாக்குதலால் ஏற்பட்ட செயலிழப்பு என்பதை நிரூபிக்க எந்த அறிகுறியும் இல்லை என்று 'ஆப்டஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கெல்லி பேயர்-ரோஸ்மரின் கூறியுள்ளார்.
7 மணிநேரத்திற்கு மேலாக தொடரும் தொலை தொடர்பு துண்டிப்பு
"இது எதனால் நடந்திருக்கக்கூடும் என்பதை எங்கள் குழு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கு பல சாத்தியங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு சாத்தியக்கூறையும் நாங்கள் ஆய்வு செய்துவிட்டோம். ஆனால், அவை அடிப்படை சிக்கலை தீர்க்கவில்லை," என்று தலைமை நிர்வாகி கெல்லி பேயர்-ரோஸ்மரின் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டதும், தொலை தொடர்புகள் எப்போது சீரமைக்கப்படும் என்பதை நாங்கள் அறிவிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தொலை தொடர்பு துண்டிப்பால் மொபைல் போன்கள், லேண்ட்லைன்கள் மற்றும் பிராட்பேண்ட் இணையம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. 'ஆப்டஸ்' ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். இந்த நிறுவன சேவைகளில் ஏற்பட்ட செயலிழப்பு உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4:05 மணியளவில் கண்டறியப்பட்டது.